Last Updated : 21 Nov, 2024 04:26 PM

 

Published : 21 Nov 2024 04:26 PM
Last Updated : 21 Nov 2024 04:26 PM

மூத்த பத்திரிகையாளர் வி.டி.ராஜசேகர் மங்களூருவில் காலமானார்: ஸ்டாலின், சித்தராமையா இரங்கல்

மூத்த பத்திரிகையாளர் வி.டி.ராஜசேகர் (கோப்புப் படம்)

பெங்களூரு: நாட்டின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும், 'தலித் வாய்ஸ்' பத்திரிகையின் நிறுவன ஆசிரிய‌ருமான வி.டி.ராஜசேகர் (93) கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் புதன்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகேயுள்ள ஒன்டிபெட்டுவை சேர்ந்தவ‌ர் வி.டி.ராஜசேகர் (93). மங்களூருவில் கல்லூரி படிப்பை முடித்த இவர், பெங்களூருவில் இயங்கிவந்த டெக்கன் ஹெரால்ட் நாளிதழில் நிருபராக பணிக்கு சேர்ந்தார். அங்கு 7 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் மூத்த நிருபராக பணியில் இணைந்தார். 25 ஆண்டுகள் அங்கு பணியாற்றிய அவர், 1981ல் பின்னர் 'தலித் வாய்ஸ்' என்ற ஆங்கில இதழை தொடங்கினார்.

இந்திய அளவில் அதிகம் வாசிக்கப்பட்ட தலித் இதழான 'தலித் வாய்ஸ்' பத்திரிகையில் சாதி எதிர்ப்பு, பட்டியலின மக்கள் மீதான ஒடுக்குமுறை, இந்துத்துவ எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு, சமூக நீதி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக தொடர்ந்து எழுதி வந்தார். ஏறக்குறைய 70 ஆண்டுகள் பத்திரிகையாளராக வி.டி.ராஜசேகர் எழுதிய கட்டுரைகள் 100க்கும் மேற்பட்ட நூல்களாக வெளியாகியுள்ளன. அதில் காந்தி, அம்பேத்கர் மோதல் ஏன்?, மார்க்ஸ் இந்திய மண்ணில் தோற்றது எப்படி? கோட்சே ஏன் காந்தியை கொன்றார்? ‘தலித்துகள்: இந்தியாவின் கறுப்பினத்தவர்கள்’ உள்ளிட்ட நூல்கள் பரவலான கவனத்தை பெற்றன.

1985-ல் தலித் வாய்ஸ் இதழில் இந்துத்துவத்தை விமர்சித்து தலையங்கம் எழுதியதற்காக கைது செய்யப்பட்டார். பின்னர் மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்துவதாக தடா வழக்கிலும், தேச துரோக வழக்கிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதழியல் பணிகளுடன், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொடர்ந்து போராடிவந்தார். இதற்காக அவருக்கு லண்டனை சேர்ந்த மனித உரிமை அமைப்பு, சிறந்த பத்திரிகையாளர் விருது வழங்கியுள்ளது.

2010-க்கு பின்னர் மங்களூருவுக்கு திரும்பிய வி.டி.ராஜசேகர் அங்கு தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். முதுமையின் காரணமாக‌ உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், சிவாபாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் ஒன்டிபெட்டுவில் இன்று பிற்பகலில் அடக்கம் செய்யப்பட்டது.

இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், “புகழ்பெற்ற பத்திரிகையாளர் வி.டி.ராஜசேகர் தனது தலித் வாய்ஸ் பத்திரிகையின் மூலம் அறிவு தளத்தில் சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார். அவரது சமரசமற்ற போராட்டம் இளைய தலைமுறைக்கு உத்வேகமாக இருந்தது''என குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது இரங்கல் குறிப்பில், “பத்திரிகையாளராக மட்டுமல்லாமல் சிறந்த மனித உரிமை செயற்பாட்டாளராகவும் வி.டி.ராஜசேகர் விளங்கினார். அயராத போராட்டத்தின் விளைவாக பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தினார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் அவரது வாசகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x