Published : 21 Nov 2024 04:12 PM
Last Updated : 21 Nov 2024 04:12 PM

உலக அமைப்புகளில் சீர்திருத்தங்கள் காலத்தின் தேவை: இந்தியா - கரிகாம் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

ஜார்ஜ்டவுன் (கயானா): சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் தேவை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கயானாவின் ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற இரண்டாவது இந்தியா-கரிகாம் (கரீபியன் சமுதாயம் மற்றும் பொதுச்சந்தை) உச்சிமாநாட்டில் நிறைவுரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "உங்கள் அனைவரின் மதிப்புமிக்க ஆலோசனைகளையும், நேர்மறையான எண்ணங்களையும் நான் வரவேற்கிறேன். இந்தியாவின் முன்மொழிவுகளுக்கு மதிப்பளித்து, எனது குழுவினர் அனைத்து விவரங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து துறைகளிலும் நாம் முன்னேறிச் செல்வோம்.

இந்தியாவுக்கும் கரிகாம் நாடுகளுக்கும் இடையேயான உறவுகள், பகிர்ந்து கொள்ளப்பட்ட கடந்தகால அனுபவங்கள், பகிர்ந்து கொள்ளப்பட்ட நிகழ்காலத் தேவைகள் மற்றும் எதிர்காலத்திற்கான நமது பகிரப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. இந்த உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது.

எங்களது அனைத்து முயற்சிகளிலும், உலகளாவிய தெற்கின் கவலைகள் மற்றும் அதன் முன்னுரிமைகள் மீது நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். இந்தியாவின் தலைமையின் கீழ், கடந்த ஆண்டு, ஜி 20 உலகளாவிய தெற்கின் குரலாக உருவெடுத்தது. பிரேசிலில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டிலும் உலகின் தெற்கு நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு உலக சமூகத்தை நான் கேட்டுக் கொண்டேன்.

உலக அமைப்புகளில் சீர்திருத்தங்கள் அவசியம் என்பதை இந்தியாவும், கரிகாம் நண்பர்களும் ஒப்புக் கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய உலகிற்கும், இன்றைய சமுதாயத்திற்கும் ஏற்ப அவர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ளவேண்டும். இது காலத்தின் தேவையாகும். இதை நனவாக்குவதற்கு, கரிகாம் உடனான நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் கரிகாமின் ஆதரவு மிகவும் முக்கியமானது.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், ஒவ்வொரு துறையிலும் நமது ஒத்துழைப்புக்கு புதிய பரிமாணத்தைச் சேர்க்கும். இவற்றை அமல்படுத்துவதில் இந்தியா-கரிகாம் கூட்டு ஆணையம் மற்றும் கூட்டுப் பணிக்குழுக்கள் முக்கியப் பங்காற்றும். நமது ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், 3-வது கரிகாம் உச்சிமாநாட்டை இந்தியாவில் நடத்துவதை நான் முன்மொழிகிறேன். அதிபர் இர்பான் அலி, பிரதமர் டிகான் மிட்செல், கரிகாம் தலைமைச் செயலகம் மற்றும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டார்.

டொமினிகாவின் உயரிய தேசிய விருது: இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், டொமினிகாவின் உயரிய தேசிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு டொமினிகா அதிபர் சில்வானி பர்டன் அந்நாட்டின் மிக உயரிய தேசிய விருதான "டொமினிகா கௌரவ விருதை" வழங்கினார். ராஜதந்திரம், கோவிட் 19 பெருந்தொற்றின் போது டொமினிகாவுக்கு அளித்த ஆதரவு, இந்தியா மற்றும் டொமினிகா உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமரின் உறுதிப்பாடு ஆகியவற்றிற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

டொமினிக்கா பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி, பார்படோஸ் பிரதமர் மியா அமோர் மோட்லி, கிரெனடா பிரதமர் டிக்கோன் மிட்செல், செயிண்ட் லூசியா பிரதமர் பிலிப் ஜே. பியரி, ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமர் காஸ்டன் பிரவுன் ஆகியோரும் இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்றனர். இந்தக் கவுரவத்தை இந்திய மக்களுக்கும், இந்தியா மற்றும் டொமினிகா இடையேயான வலுவான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளுக்கும் அர்ப்பணிப்பதாக பிரதமர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பிணைப்பு வரும் ஆண்டுகளில் தொடர்ந்து வளர்ந்து வலுவடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கயானாவின் ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் விருது: கயானாவின் ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது. அரசு மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், கயானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கயானாவின் மிக உயர்ந்த தேசிய விருதான "ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்" விருதை வழங்கினார். பிரதமரின் தொலைநோக்கு ராஜதந்திரம், உலக அரங்கில் வளரும் நாடுகளின் உரிமைகளை வென்றெடுத்தல், உலக சமூகத்திற்கு சிறப்பான சேவை, இந்தியா-கயானா உறவுகளை வலுப்படுத்துவதில் அவரது உறுதிப்பாடு ஆகியவற்றிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

விருதை ஏற்றுக்கொண்ட பிரதமர், இந்தக் கவுரவத்தை இந்திய மக்களுக்கும், இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான ஆழமான வரலாற்று உறவுகளுக்கும் அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார். இந்தியா-கயானா இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு தமது அரசுமுறைப் பயணம் ஒரு சான்றாகும் என்று அவர் கூறினார். கயானாவின் மிக உயர்ந்த தேசிய விருதைப் பெறும் நான்காவது வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x