Published : 21 Nov 2024 04:45 AM
Last Updated : 21 Nov 2024 04:45 AM
உத்தர பிரதேசத்தில் நேற்று இடைத் தேர்தல் நடைபெற்ற கர்ஹல் தொகுதியில், இளம் பெண் ஒருவரின் உடல் சாக்கு பையில் கிடந்தது. பாஜக.வுக்கு ஆதரவு தெரிவித்ததால் சமாஜ் வாடி கட்சியைச் சேர்ந்த உள்ளூர் நபர் இந்த கொலையை செய்துள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் கதேஹரி, கர்ஹல், மிராபூர், காஜியாபாத் உட்பட 9 சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் கர்ஹல் தொகுதியில் இளம் பெண் உடல் சாக்கு பையில் நேற்று கிடந்தது. அவர் அப் பகுதியைச் சேர்ந்த 23 வயது பட்டியலினப் பெண் என அடையாளம் காணப்பட்டது. இந்த கொலை சம்பவம் குறித்து மைன்புரி மாவட்ட போலீஸார் கூறியதாவது: இந்த கொலை தொடர்பாக இளம்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் பிரசாந்த் யாதவ் மற்றும் மோகன் கதேரியா ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் பிரசாந்த் யாதவ், என்பவர் 3 நாட்களுக்கு முன்பு இளம் பெண் வீட்டுக்கு வந்து, நீங்கள் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அந்த இளம் பெண் தாமரை சின்னத்துக்கு வாக்களிப்பேன் என கூறியுள்ளார். தங்களுக்கு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கிடைத்ததால், தாமரைக்கு வாக்களிப்பேன் என அந்தப் பெண் கூறியுள்ளார். இதனால் சமாஜ்வாதியின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என பிரசாந்த் யாதவ் மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து உ.பி பாஜக தலைவர் புபேந்திர சிங் சவுத்திரி எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘சமாஜ்வாதி கட்சியின் பிரசாந்த் யாதவும் அவரது ஆதரவாளர்களும், பட்டியலின பெண்ணை கொலை செய்துள்ளனர். அவர் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்க மறுத்ததால் கொலை செய்யப்பட்டுள்ளார்’’ என்றார்.
உ.பி கர்ஹல் தொகுதி சமாஜ்வாதி வேட்பாளர் தேஜ் பிரதாப் யாதவ் கூறுகையில், ‘‘ இந்த கொலை சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை தேவை. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். ரோந்து என்ற பெயரில் வாக்காளர்களை போலீஸார் மிரட்டினர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT