Published : 20 Nov 2024 04:38 PM
Last Updated : 20 Nov 2024 04:38 PM
புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 45.53% வாக்குகளும், ஜார்க்கண்ட் இரண்டாம் கட்ட தேர்தலில் 61.47% வாக்குகளும் பதிவாகி உள்ளன.
மகாராஷ்டிரா வாக்குப்பதிவு நிலவரம்: மகாராஷ்டிராவில் நக்ஸல் பாதிப்பு மிகுந்த கட்சிரோலி மாவட்டத்தில் அதிகபட்சமாக 62.99% வாக்குகளும், தானே தொகுதியில் குறைந்தபட்சமாக 38.94% வாக்குகளும் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மும்பை நகரத்தில் 39.34% வாக்குகளும், மும்பை புறநகரில் 40.89% வாக்குகளும், நாக்பூரில் 44.45% வாக்குகளும் பதிவாகி உள்ளன. அவுரங்காபாத் - 47.05%, புனே - 41.70%, நாசிக் - 46.86%, சத்தாரா - 49.82%, துலே - 47.62%, பால்கர் - 46.82%, ரத்னகிரி - 50.04%, நான்டெட் - 42.87%, லட்டூர் - 48.34% வாக்குகள் பதிவாகி உள்ளன. நான்டெட் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 41.58% வாக்குகள் பதிவாகி உள்ளன.
மகாராஷ்டிரா தேர்தல் களம்: மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
மகாயுதி கூட்டணியில் பாஜக 149, ஷிண்டே அணி 81, அஜித் பவார் அணி 59 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101, உத்தவ் தாக்கரே அணி 95, சரத் பவார் அணி 86 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. இந்த சூழலில் மகாராஷ்டிராவின் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகுிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாநிலத்தில் மொத்தம் 9.63 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 158 கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 4,136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தானே மாவட்டம் கோப்ரி-பச்பகாடி தொகுதியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே போட்டியிடுகிறார். துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் தெற்கு-மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். மும்பை வோர்லி சட்டப்பேரவைத் தொகுதியில் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே மீண்டும் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த மிலிந்த் தியோரா போட்டியிடுகிறார். இவர் கடந்த ஜனவரியில் காங்கிரஸில் இருந்து விலகி ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தார். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஜார்க்கண்ட் வாக்குப்பதிவு நிலவரம்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று 2-ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலூக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 3 மணி நேர நிலவரப்படி 61.47% வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தம் 12 மாவட்டங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 13-ம் தேதி முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், 66.65% வாக்குகள் பதிவாகியது. இரண்டாம் கட்டமாக இன்று 38 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தொகுதிகளில் மொத்தம் 1.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 528 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதேபோல நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 48 சட்டப்பேரவைத் தொகுதிகள், வயநாடு, நான்டெட் மக்களவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT