Published : 20 Nov 2024 02:21 AM
Last Updated : 20 Nov 2024 02:21 AM
பாதுகாப்பு, வர்த்தகம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்பட இந்தியா, இத்தாலி இடையே 5 ஆண்டு செயல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ டி ஜெனிரோ நகரில் 19-வது ஜி-20 உச்சி மாநாடானது நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில் நேற்று இந்த மாநாடு நிறைவுற்றது. இதில் உலக தலைவர்கள் கலந்துகொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளனர். அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் ஜி 20 கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. தற்போது நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங், இத்தாலி, பிரான்ஸ் அதிபர்கள் என உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பல்வேறு நாடுகளின் தலைவர்களை உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசி வருகிறார்.
இந்நிலையில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளிடையே உள்ள உறவை மேம்படுத்துவது தொடர்பாக இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.
மேலும், பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உறவுகளை அதிகப்படுத்துவது தொடர்பாகவும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறும்போது, "ரியோ டி ஜெனிரோ ஜி-20 மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்ததில் மகிழ்ச்சி. பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உறவுகளை ஆழப்படுத்துவதை மையமாக வைத்து எங்களது பேச்சுக்கள் அமைந்தன. கலாச்சாரம், கல்வி மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்தும் நாங்கள் பேசினோம். இந்தியா-இத்தாலி நட்புறவு ஒரு சிறந்த உலக முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவும்" என்று அதில் பதிவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு, வர்த்தகம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இரு நாடுகளும் இணைந்து செயல்பட 5 ஆண்டு செயல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 2025-ம் ஆண்டு முதல் 2029-ம் ஆண்டு வரை இந்த செயல் திட்டம் அமலில் இருக்கும். 10 முக்கிய துறைகளில் இரு நாடுகளிடையிலான உறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதை இந்த செயல் திட்டம் உறுதிப்படுத்தும்.
பொருளாதார கூட்டுறவு, முதலீடு, மின்னுற்பத்தி மாற்றம், விண்வெளி, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட 10 துறைகளில் இரு நாடுகளும் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இரு நாட்டு பிரதமர்களும் சந்தித்துப் பேசுவது இது 5-வது முறையாகும். கடைசியாக இத்தாலியின் புக்லியா நகரில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டின்போது இருவரும் சந்தித்துப் பேசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT