Published : 19 Nov 2024 07:29 PM
Last Updated : 19 Nov 2024 07:29 PM
சர்வதேச அரசியலை காசா, உக்ரைன் போர்கள் அச்சுறுத்திக் கொண்டிருப்பது போலவே ஒன்றரை ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது மணிப்பூர் கலவரம் என வேதனையுடன் கூறும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது வடகிழக்கு மாநிலத்தின் தீராத் துயரம்.
கடந்த 2023-ஆண்டு மே மாதம் பற்றிய நெருப்பு இன்னும் அடங்காமல் தீவிரமாக அனலைப் பரப்பிக் கொண்டே இருக்கிறது. மணிப்பூரில் உள்ள மைத்தேயி இனத்துக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதை பரிசீலிக்கும்படி கூறிய அம்மாநில உயர் நீதிமன்றத்தின் அனுமதிக்கு பழங்குடிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அனைத்து பழங்குடியின மாணவர்கள் சங்கம் அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்தப் பேரணியில் ஏற்பட்ட மோதல், மாநிலம் முழுவதும் பரவி வன்முறையாக உருவெடுத்து, இன்று வரை தொடர்கிறது.
மைத்தேயி - குக்கி சமூகத்தினர் இடையிலான வன்முறையால் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏறத்தாழ 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்தனர். 2024 மக்களவைத் தேர்தலின்போது விஸ்வரூபம் எடுக்கும், அரசியல் களத்தை மாற்றும் என எதிர்பார்க்கப்பட்ட மணிப்பூர் வன்முறை, தேர்தல் திருவிழா பரபரப்பில் அமிழ்ந்து போனது. அதனைத் தொடர்ந்து வந்த நாட்களில் வடகிழக்கு மாநிலத்தில் அமைதி நிலவுவது போல ஒரு மாயத்தோற்றம் ஏற்பட்டது.
இப்போது அங்கு மீண்டும் வன்முறை மேகங்கள் சூழத்தொடங்கியுள்ளன. நவம்பர் 7-ல் ஜிரிபாம் மாவட்டத்தின் ஸைரான் கிராமத்தில் குக்கி பழங்குடிப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இம்முறை வன்முறைக்கு எண்ணெய் ஊற்றியுள்ளது. தொடர்ந்து நவம்பர் 11-ம் தேதி ஜிரிபாம் மாவட்டத்தின் காவல் நிலையம், சி.ஆர்.பி.எஃப் முகாம்கள் ஆகியவற்றின் மீது ஆயுதம் ஏந்திய கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.
சிஆர்பிஎஃப் வீரர்கள் நடத்திய பதிலடித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து குழந்தைகள் பெண்கள் உட்பட ஆறு பேர் கடத்திச் செல்லப்பட்டு, மூன்று நாட்களுக்கு பின்பு அவர்களின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலத்தில் வன்முறை மீண்டும் தீவிரமடையத் தொடங்கியது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்தமுறை வன்முறை வெடித்திருக்கும் ஜிரிபாம், கடந்த முறை கலவரத்தில் வன்முறை சுவடு இல்லாமல் இருந்ததே. இதேபோல் பல புதிய மாவட்டங்கள் இம்முறை வன்முறை பாதிப்பு பட்டியலில் இணைந்துள்ளன.
இந்தப் பின்னணியில், புதிதாக வன்முறை பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. என்றாலும், போராட்டக்காரர்கள் இம்முறை முதல்வர் பிரேன் சிங் மற்றும் அமைச்சர்களின் இல்லங்களை குறி வைத்தனர்.
மணிப்பூர் மக்களை வன்முறையில் இருந்து பாதுகாத்து, அமைதியை நிலைநாட்டும் வகையில் கூடுதலாக 5,000 வீரர்கள் அடங்கிய துணை ராணுவப் படையை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎப்) இருந்து 35 யூனிட், எல்லை பாதுகாப்பு படை படையில் (பிஎஸ்எப்) இருந்து 15 யூனிட் என மொத்தம் 50 கம்பெனி துணை ராணுவப் படையினர் விரைவில் மணிப்பூர் செல்கின்றனர்.
மத்திய அரசின் இப்போக்கும், மணிப்பூர் விவகாரத்தை இரட்டை இன்ஜின் அரசு கையாண்ட விதமும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. மைத்தேயி மற்றும் குக்கி போராட்டக்கார்கள் சோர்வடைந்து தாங்களாகவே இந்தக் கலவரத்தை நிறுத்தும் வரை வேடிக்கை பார்க்கலாம் என்ற போக்கை மத்திய, மாநில அரசுகள் கடைபிடிப்பதாக தெரிகிறது என்கின்றனர் மணிப்பூர் நிலவரத்தை உற்றுநோக்கும் விமர்சகர்கள்.
வடகிழக்கின் எல்லையோரத்தில் இருக்கும் மாநிலத்தின் பிரச்சினையை அதிகார பலத்தைக் கொண்டு அடக்கிவிட டெல்லி முயற்சிக்கிறது. வேரோடிப்போயிருக்கும் இனம், அடையாள உணர்வுகளை ராணுவ பலத்தைக் கொண்டு அடக்கிவிட முடியாது என்பது வரலாறு உணர்த்தும் பாடம். அப்படி செய்வது அரசை ஓர் ஆக்கிரமிப்பு சக்தியாகவே பார்க்கத் தூண்டும். மணிப்பூர் இப்போது அந்த நிலைக்கு நகர்ந்திருக்கிறது என்ற எச்சரிக்கை குரல்களும் அங்கிருந்து எழுகின்றன.
இதற்கு, பிரதமர் மோடி இதுவரை மணிப்பூர் செல்லாததை சுட்டிக்காட்டுகின்றனர். அதற்கு வலுசேர்க்கும் விதமாக, கடந்த 2023 ஜூன் மாதத்தில் இரண்டு பழங்குடியின பெண்கள் கொடூரமாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ வெளியானபோது, “இந்தியாவின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாது” என்று தனது கோபத்தை பிரதமர் வெளிப்படுத்தியிருந்தார். இதுவே மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் அதிகபட்ச எதிர்வினை என்பதும் நிதர்சனம்.
“மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறை சரியில்லை. பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று வருகிறார், ஆனால் அவர் மணிப்பூருக்குச் செல்லவில்லை. அவர் நாட்டின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர். வன்முறை தொடங்கி கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆகிறது. ஆனால், ஒருமுறைகூட அவர் மணிப்பூருக்கு வரவில்லை. பிரதமர் மோடியின் நேரடித் தலையீடு மட்டுமே நெருக்கடியைத் தீர்க்க உதவும்” என்று மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளா கூறியுள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.
மேலும், “மணிப்பூர் மாநிலத்தின் சில பகுதிகளில் ‘கடுமையான’ AFSPA சட்டத்தை மீண்டும் திணிப்பது அமைதியின்மையை மேலும் அதிகரிக்கக்கூடும். AFSPA என்பது ஒரு தீர்வாக இருக்க முடியாது. இது ஒரு கொடூரமான சட்டம். மணிப்பூரில் இது நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், அது வன்முறையை நிறுத்தவில்லை. வடகிழக்கு என்பது இந்தியாவின் ஒரு பகுதி என்பதை மத்திய அரசு வெறும் வார்த்தைகளில் மட்டுமல்ல, நடைமுறையிலும் அங்கீகரிக்க வேண்டும். AFSPA மீண்டும் அமலுக்கு வருவது நிலைமையை மேலும் மோசமாக்கும்” என்று எச்சரித்துள்ள அவர், ஒன்றரை ஆண்டுகளாக அமைதியை மீட்டெடுக்கத் தவறியதற்காக மணிப்பூர் முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள இரண்டு பக்கத்தில் கடிதம் எழுதியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, “கடந்த 18 மாதங்களாக மணிப்பூரில் சட்ட ம் - ஒழுங்கையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் மணிப்பூர் அரசும், மத்திய அரசும் தோல்வியடைந்துவிட்டன. அம்மாநில மக்கள் தங்கள் வீடுகளில் கண்ணியத்துடனும், அமைதியாக வாழ்வதையும் உறுதி செய்ய குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும்.
நமது அரசியலமைப்பின் பாதுகாவலர் என்ற முறையில், அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்துவும், மக்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் குடியரசுத் தலைவர் என்ற முறையில் நீங்கள் உடனடியாக மணிப்பூர் பிரச்சினையில் தலையிடுவது கட்டாயம். உங்களின் இந்த நடவடிக்கை மூலம் மணிப்பூர் மக்கள் கண்ணியத்துடன் பாதுகாப்பாக வாழ வழி ஏற்படும் என்று நான் நம்புகிறேன்” என்று கார்கே கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கலாச்சார வளமும் அழகும் நிறைந்த மணிப்பூர் மாநிலம், தற்போது ‘ஃப்ரோஸன் கான்ஃப்ளிக்ட்’ (Frozen Conflict) எனப்படும் உறைந்த மோதல் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. அதாவது, அரசின் தற்போதைய நடவடிக்கையால் அங்கு அமைதி திரும்புவது போன்ற தோற்றம் ஏற்பட்டாலும், உள்ளுக்குள் பிரச்சினையின் தனல் தகித்துக்கொண்டே இருக்கும். வாய்ப்பு கிடைக்கும்போது அது வெடித்து கிளம்பும், ஜிரிபாம் போல.
அதனால் இரட்டை இஞ்சின் அரசு அங்கு நிலவும் சூழலை ஆராயந்து நீண்டகால அடிப்படையில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே அம்மக்களுக்கு நாடு செய்யும் வலி நிவாரணம். ஏனெனில், வடகிழக்கு எல்லையோரம் இருந்தாலும் மணிப்பூர் இந்தியாவின் ஓர் அங்கம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT