Published : 19 Nov 2024 05:45 PM
Last Updated : 19 Nov 2024 05:45 PM

டெல்லியில் செயற்கை மழை பொழிவுக்கு மத்திய அரசு அனுமதியை கோரும் மாநில அரசு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் செயற்கை மழைக்கு அனுமதி அளிக்குமாறு மீண்டும் மத்திய அரசுக்கு கடிதம் எழுத இருப்பதாக டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபல் ராய் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி காற்று மாசு தொடர்பாக அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திய அவர், இந்த விவகாரத்தில் தலையிடுவது பிரதமர் மோடியின் பொறுப்பு என்று கூறினார்.

செவ்வாய்க்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் கோபால் ராய், "தேசிய தலைநகரில் செயற்கை மழைக்கு அனுமதிக்குமாறு டெல்லி அரசு தொடர்ச்சியாக பல முறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு நவடிக்கை எடுக்கவில்லை. நான் மீண்டும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவுக்கு கடிதம் எழுத உள்ளேன். டெல்லியில் GRAP Stage IV கட்டுப்பாடு உள்ளது. வாகன மற்றும் தொழிற்சாலை புகையைக் கட்டுப்படுத்த சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். நகருக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கையினை குறைக்கும் வகையில், தனியார் மற்றும் லாரிகளுக்கு கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.

புகை மூட்டத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை ஆராய நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். பரிசீலனையில் உள்ள தீர்வுகளில் ஒன்று செயற்கை மழை. இது காற்றிலுள்ள மாசை குறைத்து சுத்தப்படுத்துகிறது. நகரின் மோசமான மாசு நிலை மற்றும் செயற்கை மழைக்கு அனுமதி வழங்க அவசரக் கூட்டத்தை கூட்டுமாறு டெல்லி அரசு, மத்திய அரசுக்கு விடுத்த தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொடர்ந்து மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு செயல்பட வேண்டும். அது அவரது தார்மிக பொறுப்பு. மத்திய அரசுடன் இணைந்து செயல்பட டெல்லி அரசு தயாராக உள்ளது. ஆனால், செயற்கை மழை குறித்து விரிவான ஆராய்ச்சி நடத்திய கான்பூர் ஐஐடி நிபுணர்கள் அடங்கிய கூட்டத்தை மத்திய அரசு கூட்டி தலைமையேற்க வேண்டும். இதற்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் அனுமதி வேண்டும்.

வட இந்தியா முழுவதும் GRAP அமல்படுத்தப்பட வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்கள் விதிகளை மீறுகின்றன. டெல்லியில் மாசு தொடர்ந்தால் GRAP IV நீடிக்கும். இதில் எந்தவித தளர்வும் கிடையாது" என்று அமைச்சர் தெரிவித்தார்.

ஆன்லைன் வகுப்புகள்: டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி டெல்லி அரசு ஏற்கெனவே 10 மற்றும் 12 -ம் வகுப்பு தவிர மற்ற மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகளை நடத்த தடைவிதித்துள்ளது. மேலும், அவர்களுக்கான வகுப்பு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இதனிடையே “டெல்லி இனியும் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டுமா?” என அங்கு நிலவும் காற்று மாசை குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x