Published : 19 Nov 2024 03:22 PM
Last Updated : 19 Nov 2024 03:22 PM
புதுடெல்லி: ஆம் ஆத்மியில் இருந்து விலகும் முடிவு திடீரென எடுத்தது கிடையாது. மதிப்புகளும் கொள்கைகளும் நீர்த்துப் போவதைக் கண்டதால் தைரியத்தை திரட்டிக்கொண்டே வெளியே வந்தேன் என்று ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறிய கைலாஷ் கெலாட், நேற்று (திங்கள்) பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கைலாஷ் கெலாட், “ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறும் முடிவு ஒரே இரவில் எடுக்கப்பட்டது அல்ல. மிக நீண்ட காலத்துக்குப் பிறகே இது நிகழ்ந்தது. சில விஷயங்களை புரிந்து கொள்ள நேரம் தேவைப்பட்டது. சில மதிப்புகள் மற்றும் கொள்கைகளோடு நாம் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். அவை நீர்த்துப்போவதை பார்த்ததால் தைரியத்தை திரட்டிக் கொண்டு வெளியே வரும் முடிவை நான் எடுத்ததாகவே கருதுகிறேன். என்னைப் போலவே பலர் ஆம் ஆத்மியில் இருக்கிறார்கள். தைரியம் இல்லாதவர்கள் அங்கேயே தொடருவார்கள்” என தெரிவித்தார்.
டெல்லி முதல்வர் பதவி அடிஷிக்கு கொடுக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே நீங்கள் கட்சியில் இருந்து வெளியேறினீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த கைலாஷ் கெலாட், “டெல்லியின் போக்குவரத்துத் துறை அமைச்சராகவே இன்னமும் நான் என்னை நினைத்துக்கொள்கிறேன். போக்குவரத்துத் துறையை கையாண்டதில் மகிழ்ச்சியும் திருப்தியும் எனக்கு கிடைத்தது. நான் யாருக்கும் எதிராக இல்லை. யாருக்கு எந்த பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பதற்கான சிறப்புரிமை முதல்வருக்கு இருக்கிறது. அதுபற்றி நான் எதையும் சொல்ல மாட்டேன்” என கூறினார்.
சுதந்திர தினத்தன்று முதல்வருக்குப் பதிலாக கொடியேற்ற அரவிந்த் கேஜ்ரிவால் அதிஷியை தேர்ந்தெடுத்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கைலாஷ் கெலாட், “அதுபற்றி எனக்குத் தெரியாது. ஏனென்றால் சிறையில் இருந்து கடிதம் எழுதுவதற்கு நெறிமுறை உள்ளது. உள்துறை அமைச்சராக இருந்து அதை நான் நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். அந்த செயல்முறை பின்பற்றப்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. செயல்முறை பின்பற்றப்பட்டிருந்தால் கடிதம் நிச்சயமாக வந்திருக்கும்” எனக் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT