Published : 19 Nov 2024 03:54 AM
Last Updated : 19 Nov 2024 03:54 AM

சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் நாளை வாக்குப்பதிவு

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது. இங்கு நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகின்றன. முடிவுகள் 23-ம் தேதி வெளியாகின்றன.

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இங்கு தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

இங்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ்(சரத்சந்திர பவார் அணி) ஆகியவை உள்ளடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இங்கு மகாயுதி கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பலர் பங்கேற்றனர். மகா விகாஸ் அகாடி கூட்டணியை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.

மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும, சிவ சேனா (ஷிண்டே அணி) 81 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மகா விகாஸ் அகாடி கூட்டணியில், காங்கிரஸ் 101 இடங்களில் போட்டியிடுகிறது. சிவசேனா உத்தவ் அணி 95 இடங்களிலும, தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சி 86 இடங்களிலும் போட்டியிடுகிறது.

பஜாவின் ஒற்றுமையே பலம் என்ற கோஷம் இந்த தேர்தலில் பலமாக ஒலிக்கிறது. இதனால் வாக்காளர்களை மத ரீதியாக மகாயுதி கூட்டணி பிரிப்பதாக, மகா விகாஸ் அகாடி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் காங்கிரஸ்க்கு ‘நோ’ சொல்லுங்க என்ற கோஷத்தை பாஜக தொடங்கியுள்ளது.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவோம், சமூக நீதி மற்றும் அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என கூறி மகா விகாஸ் அகாடி கூட்டணி பிரச்சாரம் செய்தது. ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் மகாயுதி கூட்டணியும், ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் நம்பிக்கையில் மகா விகாஸ் அகாடி கூட்டணியும் உள்ளது.

ஜார்க்கண்டில் 2-ம் கட்ட தேர்தல்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்த உள்ள 81 தொகுதிகளிக்கு 2 கட்டங்களாக சட்டப் பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்குள்ள 43 தொகுதிகளில் கடந்த 13-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

ஜார்கண்ட்டில் காங்கிரஸ் கட்சி 30 இடங்களிலும், ஜேஎம்எம் 42 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 6 இடங்களிலும் போட்டியிடுகிறது. இங்கு காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரம் தீவிரமாக நடைபெறவில்லை என இண்டியா கூட்டணியில் உள்ள ஜேஎம்எம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகள் வருத்தம் தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வரும் 23-ம் தேதி வெளியாகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x