Published : 19 Nov 2024 03:04 AM
Last Updated : 19 Nov 2024 03:04 AM

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்: மும்பையில் ராகுல் காந்தி வாக்குறுதி

‘‘இடஒதுக்கீடு முறையில் உள்ள 50 சதவீத உச்சவரம்பை நாங்கள் அகற்றி, சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவோம்’’ என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்துக்காக மும்பை வந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல், கொள்கைகளுக்கு இடையிலான போராட்டம். சில கோடீஸ்வரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான போராட்டம். மகாராஷ்டிராவில் இருந்து ஃபாக்ஸ்கான் மற்றும் ஏர்பஸ் உட்பட ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் குஜராத் சென்றுள்ளன. இதன் மூலம் மகாராஷ்டிரா இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

இட ஒதுக்கீடு முறையில் 50 சதவீத உச்சவரம்பை நாங்கள் அகற்றுவோம். நாட்டில் சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவோம். இது எங்கள் முன் உள்ள மிகப் பெரிய பணி. அதை நாங்கள் நிறைவேற்றுவோம்.

மகராஷ்டிரா மக்களின் நலனை மகா விகாஸ் அகாடி அரசு பாதுகாக்கும். மும்பையில் மேற்கொள்ளப்படும் தாராவி மறுவளர்ச்சி திட்டத்தில் ஒரு நபருக்கு (அதானிக்கு) உதவ ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் செயல்படுகிறது. இது நியாயமற்றது. நாட்டின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், மற்றும் நாட்டின் சொத்துக்களின் டெண்டர்கள் எல்லாம் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. நாம் ஒன்றாக இணைந்திருந்தால், நாம் பாதுகாப்பாக இருப்போம் என்பது நரேந்திர மோடியின் கோஷம். பாதுகாப்பாக இருப்பது யார்? யாருடைய பாதுகாப்பு? மோடியும், அதானியும் ஒன்றாக இருக்கும்வரை பாதுகாப்பாக இருப்பர்.இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x