Published : 19 Nov 2024 03:00 AM
Last Updated : 19 Nov 2024 03:00 AM

போர்களால் உணவு, எரிபொருளுக்கு தட்டுப்பாடு: ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கவலை

ரியோ டி ஜெனிரோ: பல்வேறு நாடுகளிடையே நீண்ட காலமாக நீடிக்கும் போர்கள் மற்றும் போர் பதற்றத்தால் தெற்கு நாடுகளில் உணவு, எரிபொருள், உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது என்று ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார்.

நைஜீரியா, பிரேசில், கயானா நாடு​களுக்கு 5 நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 16-ம் தேதி டெல்​லியிலிருந்து புறப்​பட்​டார். முதலில் நைஜீரியா தலைநகர் அபுஜா சென்ற அவர், அந்த நாட்டு அதிபர் போலா அகமது தினுபுவை சந்தித்து பேசினார். அப்போது பாது​காப்பு, சுகா​தா​ரம், கல்வி, எரிசக்தி, சுரங்கம், மருந்து உற்பத்தி, தகவல் தொழில்​நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியா​வும் நைஜீரி​யாவும் இணைந்து பணியாற்ற இரு நாடு​களின் தலைவர்​களும் உறுதியேற்​றனர்.

ஜி20 உச்சி மாநாட்​டில் பங்கேற்க பிரதமர் மோடி நைஜீரி​யா​வில் இருந்து நேற்று பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகருக்கு சென்​றார். அங்கு பிரேசிலுக்கான இந்திய தூதர் சுரேஷ் ரெட்டி மற்றும் இந்திய வம்சாவளி​யினர் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்​றனர். சம்ஸ்​கிருதத்தில் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதினர். நடனம், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்டன.

ஜி20 உச்சி மாநாடு நேற்று தொடங்​கியது. முதல் நாளில் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா மாநாட்​டில் பங்கேற்ற தலைவர்களை வரவேற்​றார். காலை​யில் நடந்த அமர்​வில், வறுமையை ஒழிப்பது குறித்து விரிவாக விவா​திக்​கப்​பட்​டது. மாலை​யில், ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்பு​களில் சீர்​திருத்​தங்களை மேற்​கொள்வது குறித்து ஆலோசிக்​கப்​பட்​டது. முதல் நாள் அமர்வில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றனர். அப்போது இருவரும் பரஸ்பரம் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா நடத்தியது. அப்போது ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருளை முன்வைத்தோம். இந்த கருப்பொருள் தற்போதைய ஜி20 உச்சி மாநாட்டுக்கும் பொருந்தும். சர்வதேச அரங்கில் தெற்கு நாடுகளின் பிரதிநிதியாக இந்தியா செயல்படுகிறது. இதன்படி கடந்த உச்சி மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் அதிகாரப் பூர்வமாக இணைக்கப்பட்டது.

பல்வேறு நாடுகளிடையே நீண்ட காலமாக நீடிக்கும் போர்கள் மற்றும் போர் பதற்றத்தால் தெற்கு நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக உணவு, எரிபொருள், உரங் களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.

தற்போதைய ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் பிரேசில், வறுமைக்கு எதிராக சர்வதேச நாடுகள் ஓரணியாக செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. இந்த கருத்தை இந்தியா ஆதரிக்கிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x