Published : 19 Nov 2024 02:42 AM
Last Updated : 19 Nov 2024 02:42 AM
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று பேரணி சென்ற பிரியங்கா காந்தி, பாஜக கொடி அசைத்த அக்கட்சி தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இம்மாநிலத்தின் நாக்பூரில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா நேற்று முன்தினம் ஆதரவு திரட்டினார்.
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் தலைமையகம் நாக்பூரில் அமைந்துள்ளது. இந்நகரம் பாஜகவின் கோட்டையாக கருதப்படுறது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த 2014 முதல் நாக்பூர் எம்.பி.யாக உள்ளார். இந்நகரின் 6 எம்எல்ஏக்களில் 4 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் மேற்கு நாக்பூர், மத்திய நாக்பூர் பேரவை தொகுதியில் 5 கி.மீ. தொலைவுக்கு பிரியங்காவின் 'ரோடு ஷோ' நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர். மேற்கு நாக்பூர் தற்போது காங்கிரஸ் வசமும் மத்திய நாக்பூர் கடந்த 2009 முதல் பாஜக வசமும் உள்ளன.
பிரியங்கா வழிநெடுகிலும் மக்களை நோக்கி கையசைத்தவாறு பிரச்சார வாகனத்தில் சென்றார். பேரணியின் முடிவில், அந்த வழியில் ஒரு கட்டிடத்தின் மீது கூடியிருந்தவர்கள் பாஜக கொடியை அசைத்து அக்கட்சிக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். உடனே காங்கிரஸ் தொண்டர்களும் தங்கள் கட்சிக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.
ஒரு கட்டத்தில் பிரியங்கா தனது மைக்ரோ போன் மூலம் பாஜக கொடி அசைத்தவர்களை நோக்கி புன்னகையுடன் பேசினார். “பாஜவில் உள்ள நண்பர்களே ஆல் தி பெஸ்ட்" என வாழ்த்தினார். பிறகு "மகாஸ் விகாஸ் அகாடிதான் வெற்றி பெறும்" என்று அவர்களை நோக்கி பிரியங்கா கூறினார். இதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT