Published : 18 Nov 2024 06:24 PM
Last Updated : 18 Nov 2024 06:24 PM
புதுடெல்லி: பொதுமக்களின் குறை தீர்ப்பதற்கான கால அவகாசம் 30 நாட்களில் இருந்து 13 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்வதற்கான தேசிய பயிலரங்கில் காணொலி காட்சி மூலம் ஜிதேந்திர சிங் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், "பொதுமக்கள் குறைகளைத் தீர்ப்பதில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறைகளைத் தீர்ப்பதற்கான சராசரி கால அவகாசம் 30 நாட்களிலிருந்து 13 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. விரைவில் இது மேலும் குறைக்கப்படும்.
2007-ல் தொடங்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பில் பத்து சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது குறைதீர்ப்பு நிர்வாகத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முன்னேற்றங்கள் அக்டோபர் 2024-ல் மட்டும் 1,16,000-க்கும் மேற்பட்ட குறைகள் பதிவு செய்யப்படுவதற்கு வழிவகுத்தது. நிலுவையில் உள்ள குறைகள் மத்திய செயலகங்களில் 53,897 ஆக குறைக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக 28 மாதங்களாக, மத்திய செயலகங்கள் ஒவ்வொரு மாதமும் 1,00,000-க்கும் மேற்பட்ட குறைகளைத் தீர்த்துள்ளன. பல குடிமக்கள் கருத்துக்கணிப்புகளில் நேர்மறையான கருத்துக்களை வழங்கி உள்ளனர். இது அரசின் முயற்சிகளில் வளர்ந்து வரும் நம்பிக்கையைக் காட்டுகிறது. குறை தீர்க்கும் முறையை மேலும் நவீனப்படுத்த செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் ஆகியவற்றால் இயக்கப்படும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT