Published : 18 Nov 2024 04:20 PM
Last Updated : 18 Nov 2024 04:20 PM
புதுடெல்லி: கைலாஷ் கெலாட் ஒரு சுதந்திரமான மனிதர். அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார். முன்னதாக, ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங், “பாஜக மோசமான அரசியலில் ஈடுபடுகிறது. கைலாஷ் கெலாட்டுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் சிபிஐ மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இனி அவர் பாஜக சொல்படி நடப்பார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக 'மோடி வாஷிங்மெஷின்' செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல தலைவர்கள் பாஜகவில் சேருவார்கள்” என்று குற்றம் சாட்டினார்.
எனினும், பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கைலாஷ் கெலாட், "இந்த முடிவு யாரோ ஒருவரின் அழுத்தம் காரணமாக ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவு என்று சிலர் நினைக்கக் கூடும். ஆனால், இன்றுவரை யாருடைய அழுத்தம் காரணமாகவும் நான் எதையும் செய்ததில்லை என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தந்த அழுத்தத்தில் இது நடந்தது என்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடப்பதாகக் கேள்விப்படுகிறேன். ஆனால் அது தவறு.
டெல்லி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தேன். ஆம் ஆத்மி கட்சியில் நாங்கள் எதற்காக சேர்ந்தோமோ அந்த நோக்கங்கள் அனைத்தும் என் கண் முன்னே மதிப்பிழந்து கொண்டிருந்தன. இவை என் வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால், இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் லட்சக்கணக்கான ஆம் ஆத்மி கட்சியினரின் குரல் இருக்கிறது என்பதற்கு என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். எளிய மக்களுக்கு சேவை செய்ய நினைத்தவர்கள், இப்போது வசதிபடைத்தவர்களாக ஆகிவிட்டனர்" என தெரிவித்திருந்தார்.
இதனிடையே, கைலாஷ் கேலாட் பாஜகவில் இணைந்ததால் அரவிந்த் கேஜ்ரிவால் அச்சமடைந்திருப்பதாக டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கைலாஷ் கெலாட் ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறித்து அரிவிந்த் கேஜ்ரிவால் விரிவாக எதையும் பேசவில்லை. இதற்குக் காரணம், பல ரகசியங்களை அவர் அம்பலப்படுத்திவிடுவார் என்ற அச்சம்தான். அதனால்தான் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான கேஜ்ரிவால் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. அச்சம் காரணமாக கேஜ்ரிவால் கேள்விகளை தவிர்க்க முனைகிறார் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது” என விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT