Published : 18 Nov 2024 07:46 AM
Last Updated : 18 Nov 2024 07:46 AM
மதுப்பூர்: ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவைக்கான 2-ம் கட்டத் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் தியோகர் மாவட்டம் மதுப்பூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் கலந்துகொண்டு ஜேஎம்எம் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: ஜேஎம்எம் அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களைப் பார்த்து பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. ஜேஎம்எம் அரசின் சர்வஜன் பென்ஷன் திட்டம், மைன்யா சம்மான் திட்டம் ஆகியவை மக்களிடையே பிரபலமான திட்டங்களாக உள்ளன. மைன்யா சம்மான் திட்டம் மூலம் 55 லட்சம் பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்தத் திட்டத்தில் மேலும் பெண்கள் சேர்க்கப்படவுள்ளனர். இந்தத் திட்டம் மூலம் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 ரொக்கம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
அதைப் போலவே சர்வஜன் பென்ஷன் திட்டத்தின் கீழ் 40 லட்சம் பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர். இதேபோல் புலோ ஜனோ திட்டம் மூலம் 9 லட்சம் சிறுமிகள் பயன் அடைந்துள்ளனர்.
மேலும், அரசு சார்பில் 25 லட்சம் குடும்பத்தாருக்கு அபுவா ஆவாஸ் திட்டம் மூலம் வீடு கட்டித் தரப்படவுள்ளது. மேலும் 20 லட்சம் குடும்பத்தாருக்கு பச்சை நிற ரேஷன் அட்டைகள் வழங்கப்படவுள்ளன.
இந்தத் திட்டங்களைப் பார்த் துத்தான் பாஜக தலைவர்கள் தோல்வி பயத்தில் உளறி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT