Last Updated : 18 Nov, 2024 07:24 AM

4  

Published : 18 Nov 2024 07:24 AM
Last Updated : 18 Nov 2024 07:24 AM

முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை: உ.பி.யில் பாஜக எம்.பி. சதீஷ் கவுதம் பேச்சால் சர்ச்சை

புதுடெல்லி: “இந்துக்களால்தான் எம்.பி.யானேன். முஸ்லிம்கள் வாக்குகள் தேவையில்லை” என்று உத்தர பிரதேச இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக எம்.பி. சதீஷ் கவுதம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.யில் 2027-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முந்தைய அரை இறுதிப்போட்டியாக இங்கு 9 சட்டப்பேரவை தொகுதி களுக்கு 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் 9 தொகுதிகளையும் கைப்பற்ற ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக இருதரப்பும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இண்டியா கூட்டணியில் இருந்தாலும் இந்த 9 தொகுதியிலும் சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிடுகிறது.

அலிகர் மாவட்டம் கேர் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் அலிகர் மக்களவை தொகுதி பாஜக எம்.பி. சதீஷ் கவுதம் பேசியதாவது:

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வரவில்லை. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வு விசாரித்து முடிவு செய்யும்.

மத்திய அரசின் கீழ் இப்பல்கலைக்கழகத்தில் ஏழைகளும், பட்டியலின மாணவர்களும் கல்வி பயில முடிவதில்லை. ராஜா மகேந்திர பிரதாப் சிங் அளித்த நிலத்தில், அலிகர் பல்கலைக்கழகம் அமைந்ததை உலகம் அறியும். எனவே, இதுவும் ஒரு நாள் நம் நாட்டின் இதர பல்கலைக்கழகங்கள் போல் மாறும்.

மேலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்துக்களுக்கு வென்டிலேட்டர் அளிக்காதது உள்ளிட்ட பாரபட்சம் காட்டப்படுகிறது. இதில் பணியாற்றும் 200 மருத்துவர்களில் 4 பேர் மட்டுமே இந்துக்கள். இதனால் தான் இவர்கள் வாக்குகள் தேவையில்லை.

நான் கடந்த 3 மக்களவை தேர்தலிலும் இந்து சகோதர, சகோதரிகளின் வாக்குகளால் வெற்றி பெற்றேன். நான்காவது முறையாகவும் இந்து வாக்குகளால் வெற்றி பெறுவேன். இவ்வாறு சதீஷ் கவுதம் பேசினார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசும்போது, வழக்கம் போல் ‘கட்டேங்கே தோ பட்டேங்கே (பிரிந்தால் இழப்பு)’ என்பதை சுட்டிக்காட்டினார். இந்துக்களை ஒன்று சேர வலியுறுத்தும் இந்த முழக்கத்துக்கு உ.பி.யில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஜாட் சமூகத்தினர் அதிகமுள்ள அலிகரின் கேரில் முஸ்லிம்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இந்த தொகுதியில் வெற்றி பெறுவது கடினம் என்று காங்கிரஸ் ஒதுங்கி கொண்டது. இதையடுத்து 9 தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சியே காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிடுகிறது. இதன் முடிவுகள் 23-ம் தேதி வெளியாகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x