Published : 18 Nov 2024 04:11 AM
Last Updated : 18 Nov 2024 04:11 AM

1500 கி.மீ. பறந்து சென்று இலக்கை தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி

புதுடெல்லி: தொலைதூர இலக்குகளை தாக்கும் ஹைபர்சோனிக் ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) ஒடிசா கடற்கரையில் நேற்று முன்தினம் வெற்றிகரமாக சோதனை செய்தது.

டிஆர்டிஓ பல வகையான ஏவுகணைகளை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்து வருகிறது. இவைகள் முப்படைகளிலும் சேர்க்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் 1,500 கி.மீ அப்பால் உள்ள தூரத்தை தாக்கும் ஹைபர் சோனிக் ஏவுகணையை டிஆர்டிஓ ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை மையத்தில் உருவாக்கியது. இதன் தயாரிப்பில் டிஆர்டிஓ.,வின் இதர ஆய்வகங்களும் இணைந்து செயல்பட்டன.

இந்த ஏவுகணை ஒடிசாவில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் நேற்று முன்தினம் சோதித்து பார்க்கப்பட்டது. டிஆர்டிஓ மற்றும் பாதுகாப்பு படைகளின் மூத்த விஞ்ஞானிகள் முன்னிலையில் இந்த சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதற்காக டிஆர்டிஓ.,வுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தியில், ‘‘ தொலைதூர ஹைபர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதன் மூலம் இந்தியா முக்கிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நவீன ராணுவ தொழில்நுட்பங்கைளை வைத்திருக்கும் ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க தருணம். இந்த மகத்தான சாதனையை படைத்த டிஆர்டிஓ குழுவினருக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் பாராட்டுக்குள்’’ என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x