Published : 17 Nov 2024 01:06 PM
Last Updated : 17 Nov 2024 01:06 PM

மணிப்பூர் பதற்றம் | முதல்வர் வீடு மீது தாக்குதல்: AFSPA-ஐ திரும்பப் பெற வலுக்கும் கோரிக்கை

இம்பால்: மணிப்பூரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 6 பேரின் உடல்களை கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் முதல்வர், எம்எல்ஏக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

போராட்டக்காரர்கள், மாநில முதல்வர் பிரேன் சிங்கின் மருமகன் உட்பட ஆறு எம்எல்ஏக்களின் மூன்று பேரின் வீடுகளில் சூறையாடினர், சொத்துக்களை தீ வைத்து சேதப்படுத்தினர். இம்பால் நகரின் பல பகுதிகளில் போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்ததாக போலீஸார் தெரிவித்தனர். போரட்டத்தைத் தடுக்கும் விதமாக ஐந்து மாவட்டங்களில் அரசு காலவரையற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. சில இடங்களில் இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் தலைமைச் செயலர் வினீத் ஜோஷி, பாதிக்கப்பட்டுள்ள இம்பால் மேற்கு மற்றும் கிழக்கு, பிஷ்னுபூர், தவுபாங்க், கக்சிங், காங்போக்பி மற்றும் சுரசந்த்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்கு இணையம் மற்றும் மொபைல் டேட்டா சேவைகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மீண்டும் போராட்டம் ஏன்? மணிப்​பூரில் ஆயுதம் தாங்கிய குகி தீவிர​வா​தி​களால் கடத்​தப்​பட்​டதாக கூறப்​படும் ஆறு பேரில் ஒரு பெண் மற்றும் 2 குழந்தை​களின் உடல்கள் வெள்ளிக்கிழமை இரவு, ஜிரிபாம் மாவட்​டத்​தில் உள்ள போரோபெக்​ரா​வில் இருந்து 16 கி.மீ. தொலை​வில் கண்டெடுக்​கப்​பட்டன. மேலும் 3 பேரின் உடல்கள் சனிக்கிழமை பிற்​பகல் கண்டெடுக்​கப்​பட்டன. அழுகிய நிலை​யில் காணப்​பட்ட உடல்​கள், பிரேதப் பரிசோதனைக்காக எஸ்எம்​சிஎச் மருத்​துவ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டது.

இதனைத் தொடர்ந்து மணிப்பூரில் மீண்டும் போராட்ட பதற்றம் வெடித்தது. இந்நிலையில் அமைச்சர்கள் சபம் ரஞ்சன், எல். சுசிந்த்ரோ சிங் மற்றும் ஒய்.ஹேம்சந்த் ஆகியோரின் வீடுகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இம்பால் மேற்கு மற்றும் கிழக்கு, பிஷ்னுபூர், தவுபால் மற்றும் கக்சிங் ஆகிய ஐந்து மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

AFSPA ரத்து செய்ய கோரிக்கை: மாநிலத்தில் ஆறு காவல்நிலையத்தில் மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தினை மறுபரிசீலனை செய்து திரும்பப்பெறுமாறு மத்திய அரசுக்கு, மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமித் ஷாவின் தேர்தல் பேரணிகள் ரத்து: இதனிடையே, மணிப்பூர் பள்ளத்தாக்கில் மீண்டும் போராட்டமும் பதற்றமும் அதிகரித்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகாராஷ்டிராவில் திட்டமிடப்பட்டிருந்த தனது தேர்தல் பேரணிகளை ரத்து செய்துள்ளார். வடகிழக்கு மாநிலத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அமித் ஷா டெல்லி திரும்பியுள்ளார்.

முன்னதாக, மணிப்​பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்​தில் மைதேயி - குகி குழு​வினர் இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக மாறி, இரு தரப்​பிலும் நூற்றுக்​கணக்​கானோர் உயிரிழந்​தனர். வன்முறை காரணமாக சுமார் 60 ஆயிரம் பேர் வேறு இடங்​களுக்கு புலம்​பெயர்ந்​தனர். அவர்​களுக்கு தேவையான உதவிகளை மாநில அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி கோரிக்கை: மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் பதற்றம் மற்றும் போராட்டம் மிகவும் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்று அங்கு சட்ட ஒழுங்கு மற்றும் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், மிசோரமின் மாணவர் அமைப்பான, மிசோ ஸிர்லை பாவ்ல் (எம்இசட்பி), கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் உள்ள மிசோ மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x