Published : 17 Nov 2024 08:14 AM
Last Updated : 17 Nov 2024 08:14 AM
இம்பால்: மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய குகி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக கூறப்படும் மைதேயி இனத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 6 பேரின் உடல்கள் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஜிரிபாம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபகாலமாக மணிப்பூரில் மீண்டும் இரு குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. ஜிரிபாம் மாவட்டத்தில் பழங்குடியின இளம்பெண் சமீபத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வன்முறையாளர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜிரிபாம் பகுதியில் உள்ள வீடுகள், கடைகளை தீ வைத்து எரித்து குகி இனத்தை சேர்ந்வர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஜிரிபாம் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் படையினரின் முகாம் மீது குகி ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, மைதேயி மக்கள் இருந்த முகாம்களில் இருந்து 6 பேர் மாயமாகினர். மணிப்பூர் மாநில அரசில் கடைநிலை ஊழியராக பணியாற்றி வந்த லாயிஷ்ராம் ஹீரோஜித்தின் மனைவி, அவரது 2 குழந்தைகள், மாமியார், மனைவியின் சகோதரி உள்ளிட்ட 6 பேர் தான் மாயமாகி உள்ளனர் என தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீஸில் லாயிஷ்ராம் ஹீரோஜித் புகார் கொடுத்தார். அவர் கூறும்போது, “எனது மனைவி, குழந்தைகள், மாமியார் உள்ளிட்ட 6 பேரை ஆயுதம் தாங்கிய குகி தீவிரவாதிகள் கடத்திச் சென்றதை எனது நண்பரின் மனைவி பார்த்துள்ளார். என் குடும்பத்தினரை பத்திரமாக மீட்க வேண்டும் என்று போலீஸில் புகார் கொடுத்துள்ளேன்” என்றார்.
இந்நிலையில், ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள போரோபெக்ராவில் இருந்து 16 கி.மீ. தொலைவில் ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் நேற்று முன்தினம் இரவு கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில், மேலும் 3 பேரின் உடல்கள் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டன. மாயமான 6 பேரின் உடல்கள்தான் இவை என்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர். அழுகிய நிலையில் காணப்பட்ட உடல்கள், பிரேதப் பரிசோதனைக்காக எஸ்எம்சிஎச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட செய்தி பரவியதால், ஜிரிபாம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பதற்றமான நிலை உருவானது. இதையடுத்து, அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டு, கூடுதல் போலீஸார், துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சாலைகள், முக்கிய சந்திப்புகளில் அவர்கள் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதி அசாம் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளதால், அசாம் போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மைதேயி - குகி குழுவினர் இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக மாறி, இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். வன்முறை காரணமாக சுமார் 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்தனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மாநில அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT