Published : 17 Nov 2024 04:52 AM
Last Updated : 17 Nov 2024 04:52 AM
சென்னை: மத்திய நிதி ஆணைய குழுவினர் 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகின்றனர். சென்னையில் முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் அவர்கள் நாளை ஆலோசனை நடத்துகின்றனர்.
மத்திய 16-வது நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு இன்று தமிழகம் வருகிறது. இந்த குழுவில் ஆணைய உறுப்பினர்கள் அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியா காந்தி கோஷ், ஆணைய செயலர் ரித்விக் பாண்டே,இணை செயலர் ராகுல் ஜெயின் உள்ளிட்ட 12 பேர் சிறப்பு விமானத்தில் இன்று பிற்பகல் சென்னை வருகின்றனர்.
முதலில், நங்கநல்லுார் சென்று, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரெங்கராஜனை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கின்றனர். இரவு 7.30 மணிக்கு கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்று முதல்வர் ஸ்டாலினை சந்திக்கின்றனர். அங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, முதல்வர் வழங்கும் இரவு விருந்தில் பங்கேற்கின்றனர்.
நாளை (நவ.18) காலை 9.30 மணிக்கு சோழா ஓட்டலில் முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். பின்னர், தொழில், வர்த்தக துறையினர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றனர்.
மாலையில் செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.
19-ம் தேதி நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். அங்கிருந்து பெரும்புதூர் சென்று ஏற்றுமதி தொடர்புடைய நிறுவனங்களை பார்வையிடுகின்றனர். பிற்பகலில் சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் மதுரை சென்று,அங்கிருந்து ராமேசுவரம் செல்கின்றனர். ராமேசுவரம் கோயிலில் இரவு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
20-ம் தேதி தனுஷ்கோடி, ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம், கீழடி அகழ்வாராய்ச்சி மையம் ஆகியவற்றை பார்வையிடுகின்றனர். பின்னர் மதுரை வந்து, பிற்பகலில் சிறப்பு விமானத்தில் டெல்லி திரும்புகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT