Published : 16 Nov 2024 07:17 PM
Last Updated : 16 Nov 2024 07:17 PM
புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் ஜான்சியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நடந்த தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரிக்க அம்மாநில அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது. அதேவேளையில், அரசு நிர்வாகம் மீது எதிர்கட்சிகள் சாடியுள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் கல்லூரியின் பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தனர். 16 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின்போது பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் 52 முதல் 54 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவக் கல்லூரி தெரிவித்துள்ளது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும், அதற்கான காரணம் என்ன, யாருடைய மெத்தனத்தால் இது நடந்தது என்பதை அறிய விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், துணை முதல்வர் பிரிஜேஷ் பதக் மற்றும் முதன்மை சுகாதார செயலர் ஆகியோரை சம்பவ இடத்துக்கு அனுப்பியதாக மாநில அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் சனிக்கிழமையன்று, சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.
இது குறித்து பேசிய அவர், “கவனக் குறைவாகவும், சரிவர வேலை செய்யாத நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்த குழந்தைகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பது முதல் சவால். தீயணைப்புத் துறையினரும் இது குறித்து விசாரணை மேற்கொள்வார்கள். இச்சம்பவம் குறித்து விசாரிக்க அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது” என கூறினார்.
மேலும், ஒரு துக்க நிகழ்வை விசாரிக்க வந்த துணை முதல்வரை, கள ஆய்வுக்கு வந்ததைப் போல வரவேற்றதும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதோடு, மூத்த காவல் கண்காணிப்பாளர் சுதா சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், காயமடைந்த 16 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் உயிரைக் காப்பாற்ற முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
மருத்துவக் கல்லூரியில் தீயணைக்கும் கருவிகள் காலாவதியானதாக செய்திகள் வெளியான நிலையில், துணை முதல்வர் பிரிஜேஷ் பதக் அதை நிராகரித்தார். "மருத்துவக் கல்லூரியில் உள்ள அனைத்து தீயணைப்பு உபகரணங்களும் நன்றாக உள்ளன," என்று கூறினார்,
இதனிடையே, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தான் உத்தரவிட்டிருப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜான்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியின் என்ஐசியூவில் நடந்த விபத்தில் குழந்தைகள் இறந்தது மிகவும் வருத்தமாகவும், மன வேதனையாகவும் இருக்கிறது. போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
நிவாரணம் அறிவிப்பு: மேலும், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்து நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது. அப்பாவி குழந்தைகளை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களுக்கு இந்த துயரத்தை தாங்கும் சக்தியை தர இறைவனை பிரார்த்திக்கிறோம். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம் நிவாரணம் மற்றும் மீட்புக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
முதல்வர் யோகி ஆதித்யாநாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் சாடல்: உத்தரப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனைகள், துயரம், ஊழல் மற்றும் அலட்சியத்தின் குகையாக மாறிவிட்டதாக சமாஜ்வாடி கட்சி கூறியுள்ளது. “குழந்தைகளைக் காப்பாற்ற மருத்துவமனையில் எந்த ஏற்பாடும் இல்லை. பாஜக ஓர் உணர்வற்ற கட்சி" என்று சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜூஹி சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT