Published : 16 Nov 2024 05:55 PM
Last Updated : 16 Nov 2024 05:55 PM
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்ட்டரில் 5 நக்சலைட்கள் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து சத்தீஸ்கர் மாநில காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் இன்று கூறியது: “பஸ்தார் மண்டலத்துக்குட்பட்ட நாராயண்பூர் மற்றும் கான்கர் மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்துள்ள அபுஜ்மாத் வனப்பகுதியில் நக்சலைட்கள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, எல்லை பாதுகாப்புப் படை, மாவட்ட ரிசர்வ் படை மற்றும் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த வீரர்கள் நேற்று காலையில் அப்பகுதிக்கு கூட்டாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த நக்சலைட்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. பின்னர் நக்சல்கள் தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் சண்டை நடந்த இடத்தில் இருந்து 5 நக்சலைட்களின் உடல்கள் பாதுகாப்புப் படையினர் மீட்டனர். மேலும் அங்கிருந்த ஏராளமான துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். அத்துடன் தப்பி ஓடிய நக்சல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த சண்டையில் காயமடைந்த 2 வீரர்கள் ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.
சத்தீஸ்கரில் 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் மண்டலத்தில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது. பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையில், இந்த ஆண்டில் இதுவரை 197 நக்சல்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT