Published : 16 Nov 2024 05:52 PM
Last Updated : 16 Nov 2024 05:52 PM

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை: மத்திய அரசு உத்தரவு

கோப்புப்படம்

இம்பால்: மணிப்பூரில் கடந்த சில நாட்களாக பாதுகாப்புச் சூழல் பலவீனமாக இருப்பதால், அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அங்குள்ள பாதுகாப்பு படையினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் காவல் நிலையம் மற்றும் அதன் அருகில் உள்ள சிஆர்பிஎஃப் முகாமில் அதிநவீன ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட 11 பேர் சுட்டுக்கொல்லப்ப்டடனர். இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட ஆறு பேரைத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். இதனால் மாநிலத்தில் புதிய வன்முறைச் சூழல் உருவாகியுள்ளது.

இந்தப் பின்னணியில் மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்புச் சூழல் கடந்த சில நாட்களாக பலவீனமாகவே உள்ளது. இரண்டு சமூகத்தினைச் சேர்ந்த ஆயுதமேந்திய குற்றவாளிகள் வன்முறையில் ஈடுபடுவது தேவையில்லாத உயிரிழப்புகளுக்கும், பொது அமைதி சீர்குலைவுக்கும் வழிவகுக்கிறது.

சட்டம் - ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறை மற்றும் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்களிடம் அமைதி காக்குமாறும், வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

முன்னதாக, மணிப்பூர் மாநிலத்தின் பதற்றமானதாக அறிவிக்கப்பட்ட 6 பகுதிகளில் பாதுகாப்பு படையினரின் செயல்பாட்டு வசதிக்காக, ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) வியாழக்கிழமை (நவ.14) மத்திய அரசு மீண்டும் அமல்படுத்தியது. மணிப்பூர் மாநிலம் இம்பால் மேற்கு மாவட்டத்தின் சேக்மாய், லாம்சங், இம்பால் கிழக்கு மாவட்டத்தின் லாம்லை, ஜிரிபாம் மாவட்டத்தின் ஜிரிபாம், காங்போக்பியின் லீமாங்கோங் மற்றும் பிஷ்னுபூரின் மோய்ராங் ஆகிய6 காவல் நிலைய பகுதிகளில் ஆயுதப் படைகளின் சிறப்பு சட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இனக் கலவரம் காரணமாக அந்தப் பகுதிகளில் தொடர்ந்து கொந்தளிப்பான சூழல் நிலவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி மணிப்பூர் அரசு மாநிலம் முழுவதும் AFSPA சட்டத்தை அமல்படுத்தியதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் இந்த ஆறு காவல் நிலையங்கள் உட்பட 19 காவல் நிலையங்கள் விலக்கு அளிக்கப்பட்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x