Published : 15 Nov 2024 03:20 PM
Last Updated : 15 Nov 2024 03:20 PM
டேராடூன்: டேராடூனில் சொகுசு கார் ஒன்றின் மீது ட்ரக் மோதி விபத்துக்கு உள்ளானதில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். உத்தராகண்ட் மாநிலம் டேராடூனின் ஒஎன்ஜிசி சவுக்கில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. வேகமாக சென்ற மாணவர்களின் சொகுசு காரின் பின்னால் ட்ரக் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சொகுசு கார் நொறுங்கியது. அதில் ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் தலை துண்டிக்கப்பட்டது. ஒருவரின் உடல் பாகங்கள் சாலையில் சிதறியிருந்தன. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.
இப்பயங்கர நிகழ்வில் ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். அவர், சித்தேஷ் அகர்வால் (25) என்பது தெரியவந்துள்ளது. விபத்து நடந்த சில நிமிடங்களில் சித்தேஷின் ஐ போன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர கால அழைப்பு ஒன்றை அனுப்பியுள்ளது. இதனால் அவர் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே இந்த பயங்கர விபத்து நடப்பதற்கு முன்பு உயிரிழந்தவர்கள் விருந்து நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் மாணவர்கள் கையில் கோப்பைகளுடன், இசைக்கு ஏற்றவாறு ஆடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கோப்பைகளில் இருந்தது மதுபானம் போல தெரிகிறது.
இந்த வீடியோ பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மதுவின் தாக்கத்தினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமோ என்றும் காரினை ஓட்டியவர் மது அருந்தியிருந்தாரா என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடற்கூராய்வு அறிக்கை இன்னும் பெறப்படவில்லை என்பதால் அவர்கள் மதுவின் ஆதிக்கத்தி்ல் இருந்தனரா என்பதை போலீஸார் உறுதிபடுத்தவில்லை. அதேபோல் உயிரிழந்தவர்கள் எங்கு படித்து வந்தனர் என்பதையும் போலீஸார் இன்னும் தெரிவிக்கவில்லை.
விருந்தினை முடித்துவிட்டு சொகுசு காரில் வந்தவர்கள் பிஎம்டபில்யூ காருடன் பந்தையத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே உயிரிழந்தவர்களுக்கு மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "டேராடூனில் நடந்த சாலை விபத்தில் ஆறு இளைஞர்கள் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்களின் ஆன்மா இறைவனின் பாதங்களில் அமைதி கொள்ள வேண்டும். இத்துயரத்தினை தாங்கிக்கொள்ளும் மன வலிமையை அவர்களின் குடும்பத்தினருக்கு இறைவன் அளிக்க வேண்டும். ஓம் சாந்தி...” என்று குறிப்பிட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT