Published : 15 Nov 2024 12:08 PM
Last Updated : 15 Nov 2024 12:08 PM
புதுடெல்லி: பழங்குடியின தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் அவரது சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்துவைத்தார்.
பிர்சா முண்டாவின் பிறந்த தினம் பழங்குடியினரின் பெருமித தினமாக மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின தலைவரான பிர்சா முண்டா, ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள பன்சேரா உத்யான் பகுதியில், அவரது சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், டெல்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, அமித் ஷா வெளியிட்ட சமூக ஊடக பதிவில், “பழங்குடியினரின் சுயமரியாதையின் அடையாளமான பிர்சா முண்டாவின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். 'பழங்குடியினரின் பெருமை தினத்தில்' நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பழங்குடியினரின் அடையாளத்தைப் பாதுகாக்க அந்நிய ஆட்சிக்கு எதிராக பழங்குடி சமூகத்தை ஒன்றிணைத்து, உல்குலன் இயக்கத்தை வழிநடத்தியவர் பிர்சா முண்டா. பழங்குடி சமூக கலாச்சாரத்தின் மீதான சுயமரியாதை உணர்வை எழுப்புவதில் அவர் குறிப்பிடத்தக்க பங்கை வகித்துள்ளார். கலாச்சாரம் மற்றும் தாய்நாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பு நாட்டு மக்களுக்கு என்றென்றும் ஊக்கமளிக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
பிர்சா முண்டா பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவுகளில், ர்சா முண்டா தாய்நாட்டின் பெருமையை காக்க அனைத்தையும் தியாகம் செய்தார். அவரது பிறந்தநாளான 'பழங்குடியினரின் பெருமித தினமான' இந்நாளில் அவருக்கு எனது வணக்கங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய ஜார்கண்டில் 1875 இல் பிறந்த பிர்சா முண்டா, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பழங்குடியினரை அணிதிரட்டிய பெருமைக்குரியவர். அவர் தனது 25வது வயதில் பிரிட்டிஷ் காவலில் இறந்தார்.
இன்று, ஜார்க்கண்ட் மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு மாநில மக்களுக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஸ்தாபன நாளில் நமது சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பழங்குடி சமூகத்தின் போராட்டத்தாலும், தியாகத்தாலும் பாசனம் பெற்ற இந்த நிலம், நாட்டிற்கு எப்போதும் பெருமை சேர்த்துள்ளது. இந்த மாநிலம் இயற்கை வளங்கள் நிறைந்ததாகவும், வேகமாக முன்னேறிச் செல்வதாகவும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் நிறுவன தினத்தை முன்னிட்டு அமித் ஷா வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "பழங்குடியினரின் கலாச்சாரம், பரந்த இயற்கை மற்றும் புகழ்பெற்ற வரலாற்றின் பூமியான ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஸ்தாபக தினத்தில் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சுதந்திரப் போராட்டத்திலும், நவீன இந்தியாவைக் கட்டியெழுப்புவதிலும் ஜார்க்கண்ட் மக்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளனர். பிர்சா முண்டாவின் பாரம்பரியத்தை காப்பாற்றவும், ஜார்க்கண்ட் சொத்துகளில் உள்ளூர்வாசிகளின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் பிரதமர் மோடி தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மாநிலத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT