Published : 14 Nov 2024 06:27 PM
Last Updated : 14 Nov 2024 06:27 PM

“நாம் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்” - மகாராஷ்டிராவில் மோடி பிரச்சாரம்

சத்ரபதி சம்பாஜி நகர் (மகாராஷ்டிரா): எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகங்களை பலவீனப்படுத்த நினைக்கும் காங்கிரசின் சதிக்கு பலியாகாமல் விழிப்புணர்வுடன் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சத்ரபதி சம்பாஜிநகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “மகாராஷ்டிராவின் இந்த தேர்தல் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கானது மட்டுமல்ல. இந்தத் தேர்தலில் ஒருபுறம் சாம்பாஜி மகாராஜை நம்பும் தேசபக்தர்களும் மறுபுறம் அவுரங்கசீப்பைப் புகழ்ந்து பேசுபவர்களும் இருக்கிறார்கள்.

இந்த நகருக்கு (அவுரங்காபாத்) சத்ரபதி சாம்பாஜி நகர் என்ற பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பால் தாக்கரேவால் எழுப்பப்பட்டது. மகா விகாஸ் அகாதி அரசு 2.5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. ஆனால், காங்கிரஸின் அழுத்தத்தால், இந்த பெயர் மாற்றம் நிகழவில்லை. மஹாயுதி அரசாங்கம் இந்த நகரத்துக்கு சத்ரபதி சாம்பாஜி நகர் என்று பெயரிட்டது. உங்கள் விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றினோம், பால் தாக்கரேவின் விருப்பத்தை நிறைவேற்றினோம். அவுரங்காபாத், சத்ரபதி சாம்பாஜி நகராக மாற்றப்பட்டதில் யார் அதிகம் பாதிக்கப்பட்டார்கள்? ஆனால், இந்த முடிவை ரத்து செய்யக்கோரி யாருடைய சீடர்கள் நீதிமன்றம் சென்றிருந்தார்கள்.

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை மகாராஷ்டிரா வழிநடத்த வேண்டும். இந்தத் தீர்மானத்துடன் பாஜகவும், மகாயுதியும் செயல்பட்டு வருகின்றன. அதனால்தான் மகாராஷ்டிராவில் நவீன உள்கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று சம்பாஜி நகர் வழியாக சம்ரித்தி நெடுஞ்சாலை செல்கிறது. அது மராத்வாடா, விதர்பா மற்றும் மும்பையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா வளர்ச்சியின் இந்த மாபெரும் திட்டம் மட்டுமல்ல, விட்டல் பெருமானின் பக்தர்களின் வசதிக்காக, பால்கி நெடுஞ்சாலையையும் அமைத்துள்ளோம். பாஜகவும் மகாயுதியும் ஒரே உறுதியுடன் வேலை செய்கின்றன.

மகாராஷ்டிராவில் மஹாயுதி அரசு உருவான பிறகு அதிகபட்ச அன்னிய முதலீட்டை ஈர்த்துள்ளது. முதலீட்டால் மக்கள் பயன் அடைந்துள்ளனர். இந்த மண்டலத்தில் மட்டும் ரூ.70,000 கோடிக்கு மேல் ஒப்பந்தங்கள் முடிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மற்றும் மராத்வாடா மக்கள் பல பத்தாண்டுகளாக மராத்திக்கு உயரடுக்கு மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். மராட்டியப் பெருமை தொடர்பான இந்தப் பணியையும் பாஜக நிறைவேற்றி உள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நமது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு வளர்ச்சிக்கான திட்டங்களை அல்லாமல், பிரிவினையையே நம்பியுள்ளது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் முன்னோக்கி செல்வதை காங்கிரஸ் தடுக்கிறது. அதனால்தான் காங்கிரஸ் ஆரம்பத்திலிருந்தே இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறது. இது தொடர்பான பழைய செய்தித்தாள்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இடஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸின் உண்மையான சிந்தனை என்ன என்பது அந்த விளம்பரங்களில் தெளிவாகத் தெரிகிறது.

இடஒதுக்கீடு என்பது நாட்டிற்கு எதிரானது என்றும் தகுதிக்கு எதிரானது என்றும் காங்கிரஸ் கூறியது. காங்கிரஸின் மனநிலையும், காங்கிரஸின் நிகழ்ச்சி நிரலும் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. அதனால்தான் கடந்த 10 ஆண்டுகளாக ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரதமரை அவர்களைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) வெளிநாடுகளுக்குச் சென்று இடஒதுக்கீட்டை ஒழிப்போம் என்று வெளிப்படையாக அறிவிக்கிறார். இதற்காக, தற்போது எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகத்தை சிறு சிறு சாதிகளாகப் பிரிக்க சதி செய்கின்றனர். ஓபிசியை சாதி ரீதியாகப் பிரித்துவிட்டால் அதன் பலம் குறையும் என்றும், அது நிகழ்ந்தால்தான் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் அது கருதுகிறது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாய்ப்பு கிடைத்தால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி-க்கான இடஒதுக்கீட்டை நிறுத்திவிடும். எனவே, இதற்கு பலியாகாமல் விழிப்புணர்வுடன் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும், ஒற்றுமையின் வலிமையை அதிகரிக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 3 Comments )
  • குமரன்

    வேதம் ஓதுவது யாரென்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். ( யாதும் ஊரே யாவரும் கேளீர்.மறக்குமா ? )

  • I
    Ilango

    இந்த ஓபிசி பிரதமர்தான் ஒன்றிய அரசு கோட்டாவாக, மாநில அரசுகளால் ஒதுக்கப்படும் 15% மருத்துவ இடங்களில் ,பிற்படுத்தப்பட்டவருக்கு 27% இட ஒதுக்கீட்டு தர மறுத்தார்.திமுக ,உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி,இந்தியாவின் அனைத்து பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் இட ஒதுக்கீட்டை பெற்றுத்தந்தது.இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் பல்லாயிரம் பிற்படுத்தபட்ட சமூக மாணவர்கள் நாடு முழுவதும் ஆண்டுதோறும் பயனடைகிறார்கள்.இஸ்லாமியரை "ஊடுருவல்காரர்கள்" என்று சொல்லி பிரிவினை பேசும் இவர் மக்கள் ஒற்றுமையை பற்றி பேசுவது விந்தையே !

 
x
News Hub
Icon