Published : 14 Nov 2024 02:18 PM
Last Updated : 14 Nov 2024 02:18 PM

பிரதமர் மோடிக்கு டொமினிகாவின் உயரிய தேசிய விருது

புதுடெல்லி: காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

COVID-19 தொற்றின்போது கடந்த 2021, பிப்ரவரியில் இந்தியா, டொமினிகாவுக்கு 70 ஆயிரம் டோஸ் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை அன்பளிப்பாக வழங்கியது. அதோடு, டொமினிகாவின் சுகாதரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் இந்தியா உதவிகளை அளித்தது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்க உள்ளதாக டொமினிகா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டொமினிகாவின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடி டொமினிகாவின் உண்மையான நண்பர். கோவிட் தொற்றின்போது சரியான நேரத்தில் அவர் டொமினிகாவுக்கு உதவினார். இதுவரையிலான அவரது ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாகவும் நாங்கள் எங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்க உள்ளோம்.

மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நவம்பர் 19 முதல் 21 வரை கயானாவின் ஜார்ஜ்டவுனில் நடைபெறவுள்ள இந்தியா-காரிகாம் உச்சிமாநாட்டின் போது காமன்வெல்த் தலைவர் டொமினிகா சில்வானி பர்ட்டன் இந்த விருதை வழங்குவார்.” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x