Published : 14 Nov 2024 04:55 AM
Last Updated : 14 Nov 2024 04:55 AM
புதுடெல்லி: டெல்லியில் ரியல் எஸ்டேட், நகைக்கடை, வாகன விற்பனை, இனிப்பு விற்பனை என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்களுக்கு கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன.
இந்த ஆண்டில் சராசரியாக இருதினங்களுக்கு ஒருவர் என பல கோடி ரூபாய் கேட்டு இந்த மிரட்டல்கள் வருகின்றன. இவர்களில் சிலர் அலுவலகம் அல்லது வீடு முன் துப்பாக்கிகளால் குண்டுமழை பொழிந்தும் மிரட்டப்பட்டுள்ளனர். இது தொடர்பாக டெல்லி காவல் நிலையங்களில் புகார்களும் பதிவாகி உள்ளன.
இந்த மிரட்டல்களை டெல்லியின் முக்கிய தாதா கும்பல்கள் அனுப்பியிருப்பதாக கருதப்படுகிறது. கடந்த நவம்பர் 5-ல் ரோஹிணி பகுதியில் ஒரு நகைக் கடை உள்ளே புகுந்த 3 பேர் துப்பாக்கியால் வானில் சுட்ட பிறகு மிரட்டல் கடிதம் கொடுத்துச் சென்றனர். அதில், ஒரு கும்பலால் ரூ.10 கோடி கேட்கப்பட்டிருந்தது.
இதுபோன்ற மிரட்டல்கள், குஜராத் சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலாலும் தொடர்கிறது. இவற்றில் சில கும்பல்கள் வெளிநாடுகளில் இருந்தபடியும் செயல்படுகின்றன. இது தொடர்பான விசாரணைக்கு டெல்லி காவல்துறை 7 தனிப்படைகளை அமைத்துள்ளது. விசாரணையில் பெரும்பாலான மிரட்டல்கள் இணையதளம் மூலமாக வெளிநாடுகளில் இருந்தும் வந்திருப்பது தெரியவந்துள்ளது. இக்கும்பல்களுக்காக டெல்லியில் வேலைசெய்வோர், மிரட்டல் விடுக்கப்பட்டவர் முன் சென்று துப்பாக்கியால் வானில் சுட்டுவிட்டு வருவதும் வாடிக்கையாக உள்ளது.
இதன் காரணமாக டெல்லியில் துவாரகா, வடகிழக்கு டெல்லி, சங்கம் விஹார், நரேலா, கஞ்சன்வாலா உள்ளிட்ட பகுதிகளில் டெல்லி போலீஸார் நேற்று முன்தினம் இரவு முழுவதும் திடீர் சோதனைகள் நடத்தினர். இதில் பலர் சுற்றி வளைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து 'இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் டெல்லி காவல்துறை வட்டாரம் கூறும்போது, "டெல்லி தொழிலதிபர்களுக்கு பலகோடி ரூபாய் கேட்டு மிரட்டல்கள் கடந்த சில வருடங்களாகத் தொடர்கின்றன. இவற்றின் எண்ணிக்கை 2022-ல் 110, 2023-ல் 204 ஆக இருந்தது. இந்த ஆண்டு அக்டோபர் வரை 160-ஆக உள்ளது. முக்கிய 11 கும்பல்கள் மீதான சந்தேகத்தின் பேரில் அவர்களை தேடி வருகிறோம். இத்தனைக் கும் இக்கும்பல்களின் தலைவர்கள் பலரும் சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT