Published : 14 Nov 2024 04:08 AM
Last Updated : 14 Nov 2024 04:08 AM
புதுடெல்லி: நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 16-ம் தேதி அந்நாட்டுக்கு அரசுமுறை பயணமாக செல்கிறார்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரியா செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை இவருக்கு கிடைக்கும். இந்த பயணத்தின் போது அங்கு வசிக்கும் இந்தியர்களை அவர் சந்தித்து பேச உள்ளார். 17-ம் தேதி அந்நாட்டு அதிபர் போலா அகமது தினுபுவை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேசவுள்ளார்.
நைஜீரியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசில் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, ரியோ டி ஜெனிரோ நகரில் 18-ம் தேதி தொடங்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டுக்கு பிரேசில் அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தலைமை தாங்குகிறார்.
இந்த மாநாட்டில், நீடித்த வளர்ச்சி, பொருளாதார ஸ்திரத் தன்மை உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி எடுத்துரைக்க உள்ளார். இந்த மாநாட்டுக்கு இடையே, பிரேசில் அதிபர் உட்பட பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
பிரேசிலை அடுத்து, கயானா அதிபர் முகமது இர்பான் அலியின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வரும் 19-ம் தேதி அந்த நாட்டுக்கு செல்கிறார். 20-ம் தேதி அதிபர் இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார்.
இதையடுத்து கயானா நாடாளு மன்றத்தில் உரையாட உள்ள பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். கடந்த 1968-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் கயானாவுக்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT