Published : 21 Jun 2018 08:55 AM
Last Updated : 21 Jun 2018 08:55 AM

இரும்புத் தொழிற்சாலைக்கு அனுமதி கோரி ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.பி. சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்

தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஆந்திர மாநிலம், கடப்பாவில் இரும்புத் தொழிற்சாலையை தொடங்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டுமென வலியுறுத்தி, தெலுங்கு தேச கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சி.எம் ரமேஷ் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கினார்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் இரும்புத் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்குமாறு மத்திய அரசை முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி கோரி வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சி.எம் ரமேஷ், சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:

ஆந்திர மாநில பிரிவினை மசோதாவில் உள்ள 19 அம்சங்களில் கடப்பாவில் இரும்புத் தொழிற்சாலையை தொடங்க அனுமதி வழங்கும் திட்டமும் அடங்கும். இதன் மூலம் கடப்பாவில் வேலை வாய்ப்பு பெருகும். ஆந்திராவில் விசாகப்பட்டினத்திற்கு அடுத்தப்படியாக ராயலசீமா பகுதியான கடப்பாவில் தொழிற்சாலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அருகில் உள்ள சென்னை, பெங்களூரு ஆகிய மாநகரங்களுக்கு போக்குவரத்தும் அதிகரிக்கும். ஆனால், இத்திட்டத்தை மத்திய அரசு வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கண்டுகொள்ளாமல் உள்ளது. உடனடியாக இரும்புத் தொழிற்சாலை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். இதற்காக சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளேன். இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் நாடாளுமன்றத்திலும் போராடுவார்கள்.

இவ்வாறு ரமேஷ் பேசினார். இதனிடையே, இதே கருத்தை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று கடிதம் எழுதினார். உடனடியாக கடப்பாவில் இரும்புத் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கிட வேண்டுமென அதில் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இதனால், புதிய தொழில்கள் தொடங்க தொழில் நிறுவனங்கள் தயங்கி வருகின்றன. புதிய தொழிற்சாலைகள் வெளிமாநிலங்களுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், மாநிலத்தின் வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் கருத்தில் கொண்டு தெலுங்கு தேசம் கட்சி எம்பி. ரமேஷ், உண்ணாவிரதம் தொடங்கியிருப்பதோடு, இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோரிக்கைக்கு ஆந்திர மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x