Published : 13 Nov 2024 06:43 PM
Last Updated : 13 Nov 2024 06:43 PM
இம்பால்: மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் மூன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆறு பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 13 குடிமை உரிமை அமைப்புகள் அழைப்பு விடுத்த முழு அடைப்பு போராட்டத்தால் இம்பால் பள்ளத்தாக்கில் புதன்கிழமை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இம்பால் பள்ளத்தாக்கு மாவட்டங்களான கிழக்கு இம்பால், மேற்கு இம்பால், தவுபால், காக்சிங் மற்றும் பிஷ்னுபூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதலே அடைக்கப்பட்டன. தனியார் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் பேருந்துகள் ஓடவில்லை. அரசு அலுவலகங்களிலும் குறைவாக பணியாளர்கள் பணிக்கு வந்திருந்தனர்" என்று தெரிவித்தனர்.
இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக இம்பால் பள்ளத்தாக்கில் எந்தவிதமான பெரிய அசம்பாவிதமும் நடைபெறவில்லை. என்றாலும், ஜிரிபாம் மாவட்டத்துக்கு அருகே நாகா பழங்குடிகள் ஆதிக்கம் அதிகமுள்ள தமேங்லாங்கில் சரக்கு ஏற்றிச் சென்ற இரண்டு வாகனங்கள், தீவிரவாதிகளால் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. என்ஹெச்-37 அந்த சரக்கு வாகனங்களை நிறுத்திய தீவிரவாதிகள், காற்றில் பல ரவுண்ட்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்பு வாகனங்களுக்கு தீ வைத்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்துக்கு, ரொங்மெய் நாகா மாணவர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தச் சம்பவத்துக்கு பின்னால் குகி தீவிரவாதிகள் இருப்பதாக குற்றம்சாட்டியது.
காங்கிரஸ் சாடல்: இதனிடையே, தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ள குழந்தைகள், பெண்கள் உட்பட 6 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. அதேபோல், மத்திய அரசு தலையிட்டு, இரண்டு சமூக குழுக்களுக்கு இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநில காங்கிரஸ் கட்சியின் தலைரும், மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஒக்ரம் இபோபி சிங் கூறுகையில், "கடந்த சில நாட்களாக மாநிலத்தில் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. எதையும் கணிக்க முடியவில்லை. கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மனிதாபிமான அடிப்படையில் மீட்கப்பட வேண்டும் அல்லது விடுவிக்க்கப்பட வேண்டும். நாங்கள் அதிகார வெறி கொண்ட கட்சி இல்லை. ஆனால், அமைதியை பாதுகாப்பதே ஒரு அரசாங்கத்தின் முன்னுரிமை என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆறு பேர் கடத்தப்பட்டிருப்பது தெளிவாக தெரியும் போதும் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இன்னும் ஏன் மவுனமாக இருக்கிறார்கள்? நாங்கள் மனிதர்கள் இல்லையா? இங்கு நடப்பது இரண்டு நாடுகள் அல்லது மாநிலங்களுக்கு இடையேயான போர் இல்லை. ஒரு மாநிலத்தின் இரண்டு சமூக குழுக்களுக்கு இடையே நடக்கும் மோதல். மத்திய, மாநில அரசுகள் நீண்டகாலத்துக்கு முன்பே அமைதியைக் கொண்டு வந்திருக்க வேண்டும்.
நிரந்தர தீர்வுக்கான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்பு, ஓர் அமைதியான சூழல் உருவாக்கப்பட வேண்டும். இதில் மத்திய அரசுக்கு பெரிய பங்கு இருக்கிறது” என்று ஒக்ரம் தெரிவித்தார்.
முன்னதாக, மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மைதேயி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையைத் தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஏறக்குறைய 18 மாதங்களாக இந்த பகுதியில் இரு குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடைபெறுவதும், பின்னர் அமைதி ஏற்படுவதுமான சூழல் காணப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT