Published : 13 Nov 2024 05:11 PM
Last Updated : 13 Nov 2024 05:11 PM
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (நவ.13) காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மாலை 3 மணி நிலவரப்படி 59.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 13, 20 என இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, ராஞ்சி, கோதர்மா, பர்கதா, போட்கா, ஜாம்ஷெட்பூர் கிழக்கு, ஜாம்ஷெட்பூர் மேற்கு, ஹாடியா, சீசாய், கும்லா, கார்வா உள்ளிட்ட 43 தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில், 17 தொகுதிகள் பொதுத் தொகுதிகளாகவும், 20 தொகுதிகள் எஸ்டி தொகுதிகளாகவும், 6 தொகுதிகள் எஸ்சி தொகுதிகளாகவும் உள்ளன.
செராய்கெல்லா - கார்சவன் தொகுதியில் அதிகபட்சமாக 66.38 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. லோஹர்தகாவில் 65.99 சதவீத வாக்குகளும், சிம்தேகாவில் 64.31 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. பலாமு - 56.57%, ராம்கர் - 59.22%, குண்டி - 63.35%, கும்லா - 64.59%, மேற்கு சிங்பும் - 60.35%, லடேஹர் - 62.81%, கா்ரவா - 61.06%, கிழக்கு சிங்பும் - 58.72%, ஹசாரிபாக் - 57.16% வாக்குகள் பதிவாகி உள்ளன. தலைநகர் ராஞ்சியில் மிகக் குறைவாக 53.40 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
பார்ஹெட் தொகுதி வேட்பாளரான முதல்வர் ஹேமந்த் சோரன், தனது வாக்கை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “அனைவரும் அவரவர் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஜார்க்கண்ட் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து வாக்களிப்பதன் மூலம் நாம் நமது நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும்” என தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ராஞ்சியில் தனது வாக்கினை செலுத்தினார்.
இந்த தேர்தலில், 73 பெண் வேட்பாளர்கள் உள்பட 683 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் செராய்கெல்லா தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநில சுகாதாரத் துறை அமைச்சருமான பன்னா குப்தா ஜாம்ஷெட்பூர் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்வர் மது கோடாவின் மனைவி கீதா கோடா, ஜகனாத்பூர் தொகுதியில் களம் காண்கிறார். ராஞ்சியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்பி மஹூவா மாஜி போட்டியிடுகிறார்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதியோடு முடிவடைகிறது. கடந்த தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்றார். அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான பாஜக 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment