Published : 10 Jun 2018 08:34 AM
Last Updated : 10 Jun 2018 08:34 AM

திருப்பதி ஏழுமலையான் நகைகள் குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைக்க வேண்டும்: பீடாதிபதிகள் மாநாட்டில் தீர்மானம்

ஏழுமலையான் நகைகள் குறித்து விசாரணை நடத்த கமிட்டி அமைக்க வேண்டும் என்று பீடாதிபதிகள் கருத்தரங்கில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த ஒரு மாதமாக திருப்பதி தேவஸ்தானமும், சமீபத்தில் நீக்கப்பட்ட பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் குழப்பமடைந்தனர். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்கிற அளவுக்கு இந்த விவகாரம் முற்றியது.

இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு குழு சார்பில் திருப்பதியில் நேற்று பீடாதிபதிகள் பங்கேற்ற கருத்தரங்கு நடந்தது. இதில் பீடாதிபதிகள் பரிபூரணாநந்தா, வித்யாரண்ய பாரதி, கமலானந்த பாரதி, விஸ்வரூபானதா, நிர்மலாந்த யோக பாரதி சுவாமிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் தேவஸ்தானத்தில் தற்போது நடைபெறும் அர்ச்சகர்கள்-அதிகாரிகள் இடையேயான விவாதங்கள், நகைகள் குறித்து ரமண தீட்சிதர் கூறிய குற்றச்சாட்டுகள், ரமண தீட்சிதரை நீக்கிய விவகாரம் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டன. அனைத்து பீடாதிபதிகளும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.அவர்கள் கூறியதாவது:

கருத்தரங்கில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதாவது, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தார்மீக குழுவை ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த குழுவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள். பீடாதிபதிகள், மடாதிபதிகள் இருத்தல் அவசியம். இக்குழுவின் முடிவை தேவஸ்தானம் அமல்படுத்த வேண்டும்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வம்சாவளியாக வரும் அர்ச்சகர்களை நீக்கக் கூடாது. இனி வரும் வம்சாவளி அர்ச்சகர்களுக்கும் தொடர்ந்து சேவை செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும். ஏழுமலையானின் நகைகள் குறித்து விசாரணை நடத்த ஒரு கமிட்டி அமைக்க வேண்டும். தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்று மதத்தவரை கோயில்கள் அல்லாமல் வேறு இடங்களுக்கு இட மாற்றம் செய்ய வேண்டும்.

தேவஸ்தானம் மூலம் வரும் ஆதாயத்தை இந்து தார்மீக அமைப்புகளுக்கும், கோயில் வளர்ச்சி பணிகளுக்கும், பக்தர்களின் வசதிகளுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x