Published : 13 Nov 2024 02:50 AM
Last Updated : 13 Nov 2024 02:50 AM

தேர்தல் நடத்தை விதி மீறல் புகார்: ராகுல், கார்கே மீது வழக்கு பதிவு செய்ய பாஜக வலியுறுத்தல்

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரச்சார பொதுக் கூட்டங்களில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி வருவதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. மேலும், அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: பாஜகவுக்கு எதிராக தீங்கிழைக்கும் உள்நோக்கத்துடன் அவதூறான பிரச்சாரங்களை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருகிறது. தேர்தல் சட்டங்கள், நடத்தை விதிமுறைகளை தொடர்ந்து அக்கட்சி மீறி வருகிறது.

பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் இணைந்து அரசியலமைப்பை அழிக்க விரும்புவதாகவும், ஆஎஸ்எஸ் உறுப்பினர் என்ற தகுதியின் அடிப்படையில் தான் பல்கலைக்கழகத்தின் உயர் பதவிகள் வழங்கப்படுவதாகவும், இதர தகுதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் காங்கிரஸ் கட்சி பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. எனவே இதுபோன்ற ஆதாரமற்ற பரப்புரையை மேற்கொள்ள காங்கிரஸ் கட்சியினருக்கு தடை விதிப்பதுடன், கார்கே மற்றும் ராகுல் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ராகுல் காந்தி தனது பொய்யான பரப்புரை மூலமாக மகாராஷ்டிர இளைஞர்களை தூண்டிவிடுகிறார். இது, தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தானது. இவ்வாறு பாஜக புகாரில் தெரிவித்துள்ளது.

பாஜக மோசமான வகுப்புவாத பிரச்சாரம் செய்கிறது: காங்கிரஸ்

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாஜக மோசமான வகுப்புவாத பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சி மேலும் கூறுகையில்,” மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் தேர்தல் பொதுக் கூட்டங்களிலும், விளம்பரங்கள் வாயிலாகவும் வகுப்புவாத பிரச்சாரத்தை பாஜக செய்து வருகிறது. இதுதொடர்பாக அக்கட்சி மீது காங்கிரஸ் அளித்த புகாரை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற வகுப்புவாத விளம்பங்கள் தொடர்ந்தால் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ய தடைவிதிக்கவும் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது" என்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x