Published : 13 Nov 2024 02:46 AM
Last Updated : 13 Nov 2024 02:46 AM
சட்டப்பேரவை தேர்தலுக்கு மகாராஷ்டிரா தயாராகி வரும் நிலையில் முஸ்லிம் வேட்பாளர்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. இங்கு மொத்தப் போட்டியாளர்களில் 10% மட்டுமே முஸ்லிம்கள்.
மொத்தம் 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு போட்டியிடும் 4,136 வேட்பாளர்களில் 420 பேர் மட்டுமே முஸ்லிம்கள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (218 பேர்) சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர்.
பிரதான கட்சிகள் முஸ்லிம்கள் சிலரையே களமிறக்கியுள்ளன. காங்கிரஸ் 9 முஸ்லிம் வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளது. அதே நேரத்தில் பாஜக யாரையும் நிறுத்தவில்லை. என்றாலும் அதன் கூட்டணிக் கட்சியான அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) 5 பேருக்கு டிக்கெட் வழங்கியுள்ளது.
அசதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி அதிக அளவாக 16 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதே சமயம் சிறிய கட்சிகள் 150 பேரை நிறுத்தியுள்ளன. என்றாலும் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் கூட இல்லை. மேலும் சுமார் 50 தொகுதிகளில் ஒருவர் மட்டுமே போட்டியிடுகிறார்.
இந்தப் போக்குக்கு விதிவிலக்காக மத்திய மாலேகான் தொகுதி உள்ளது. இங்கு போட்டியிடும் 13 வேட்பாளர்களும் முஸ்லிம்கள். கிழக்கு அவுரங்காபாத்திலும் சிறுபான்மை வேட்பாளர்களின் எண்ணிக்கை சராசரியை விட அதிகமாக உள்ளது. இங்கு போட்டியிடும் 29 பேரில் 17 பேர் முஸ்லிம்கள், அவர்களில் மூன்று பேர் பெண்கள். மகாராஷ்டிரா முழுவதும் முஸ்லிம் பெண்களின் பிரதிநிதித்துவம் மிக குறைவாக உள்ளது. மொத்த வேட்பாளர்களில் 22 பேர் மட்டுமே முஸ்லிம் பெண்கள். மேலும் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 270-ல் முஸ்லிம் பெண் வேட்பாளர் ஒருவர்கூட இல்லை.
மகாராஷ்டிர முன்னாள் கேபினட் அமைச்சர் அனீஸ் அகமது கூறுகையில், “தேர்தலுக்கான செலவு பெரும்பாலான நடுத்தர வர்க்க வேட்பாளர்களை குறிப்பாக சிறுபான்மையினரை பின்வாங்கச் செய்கிறது. தேர்தலில் போட்டியிட சிறுபான்மையின பெண்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். என்றாலும் அதிக செலவு அவர்களைத் தடுக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT