Published : 13 Nov 2024 02:29 AM
Last Updated : 13 Nov 2024 02:29 AM

அயோத்தி ராமர் கோயில் மீது 16, 17 தேதிகளில் தாக்குதல் நடத்துவோம்: காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல்

அயோத்தியில் உள்ள ராமர் கோயில் மற்றும் இதர இந்து கோயில்கள் மீது வரும் 16, 17 தேதிகளில் தாக்குதல் நடத்துவோம் என காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார்.

காலிஸ்தான் தனி நாடு கோரி வரும் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு (எஸ்எப்ஜே) வெளிநாடுகளில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்த அமைப்பு இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

இதன் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் தான் பேசும் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதன் பின்னணியில் அயோத்தி ராமர் கோயிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்யும் படங்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் அவர் கூறும்போது, “வரும் 16, 17 தேதிகளில் இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்துவோம். அயோத்தியில் வன்முறை வெடிக்கும். இந்துத்துவா சித்தாந்தத்தின் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்வோம். வன்முறை இந்துத்துவா சித்தாந்தத்தின் பிறப்பிடமான அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் அடித்தளத்தை தகர்ப்போம்.

கனடாவின் மிசிசவுகாவில் உள்ள காளிபரி கோயிலில் 16-ம் தேதியும் பிராம்ப்டனின் திரிவேனி கோயிலில் 17-ம் தேதியும் நடைபெறவுள்ள வாழ்நாள் சான்றிதழ் முகாமில் இந்திய தூதரக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவோம். எனவே, கனடாவாழ் இந்தியர்கள் இந்த முகாமில் பங்கேற்க வேண்டாம்.

கனடாவில் உள்ள பல இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சித்தாந்தத்தை கடைபிடிக்கின்றனர். கனடா எம்.பி. சந்திர ஆர்யா இந்து தீவிரவாதத்தின் முகமாக விளங்குகிறார். அவர் கனடாவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அல்லது அங்கிருந்து அவர் உடனடியாக வெளியேற வேண்டும்” என்றார்.

கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள இந்து கோயிலில் இந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த வாரம் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக எஸ்எப்ஜே முக்கிய நிர்வாகி இந்தர்ஜீத் கோசலை கனடா போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், பன்னுன் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x