Published : 12 Nov 2024 09:08 PM
Last Updated : 12 Nov 2024 09:08 PM

மணிப்பூரில் மீண்டும் கலவரம், தாக்கும் ‘தீவிரவாத’ குழுக்கள், ஊரடங்கு... - நடப்பது என்ன? 

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது இரண்டு வயது குழந்தை உட்பட 6 பேர் கட்டத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கடத்தப்பட்டவர்களில் மூன்று பேர் மைனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரையும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர் .மீண்டும் கலவரம் வெடிதத்தைத் தொடர்ந்து ஜிரிபாம் மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மைதேயி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையைத் தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஏறக்குறைய 18 மாதங்களாக இந்த பகுதியில் இரு குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடைபெறுவதும், பின்னர் அமைதி ஏற்படுவதுமான சூழல்காணப்பட்டு வருகிறது.

மீண்டும் தாக்குதல்: இந்த நிலையில், பாதுகாப்பு படையினர், பொதுமக்களை குறிவைத்து குகி பழங்குடியினத்தை சேர்ந்த சில தீவிரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த 8-ம் தேதி ஜிரிபாம் பகுதியில் 6 வீடுகளை தீவிரவாதிகள் தீ வைத்து கொளுத்தினர். மேலும், கடந்த 9-ம் தேதி அப்பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

இதனிடையே, மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த விவசாயி ஒருவர் மீது குகி தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் அவர் காயமடைந்தார். இதன் தொடர்ச்சியாக, மணிப்பூரின் ஜிரிபாம் பகுதிகாவல் நிலையத்தை குறிவைத்து குகி பழங்குடியின தீவிரவாதிகள் திங்கள்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர். சுதாரித்துக் கொண்ட போலீஸார், அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சிஆர்பிஎஃப் வீரர்களும் விரைந்து வந்தனர். பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய என்கவுன்ட்டரில் 11 குகி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் சிஆர்பிஎஃப் 2 பேர் காயமடைந்தனர். அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஜிரிபாம் காவல் நிலையத்துக்கு அருகே அகதிகள் முகாம் உள்ளது. காவல் நிலையம் மற்றும் அகதிகள் முகாமை குறிவைத்து குகி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதல் முறியடிக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 3 நாட்களில் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்றார்.

ஊரடங்கு: இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜிரிபாம் மாவட்டம் முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மணிப்பூர் போலீஸ் டிஜிபி ராஜீவ் சிங் கூறும்போது, “மாநிலத்தில் அமைதியை நிலவச் செய்ய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. தற்போது வன்முறைச் ச சம்பவங்கள் குறைந்து வருகின்றன. நேற்று நடந்த என்கவுன்ட்டரில் 11 தீவிரவாதிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன" என்றார்.

11 பேர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக குகி-சோ இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலைப்பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இம்பால் பள்ளத்தாக்கில் பல இடங்களில் புதிய வன்முறை சம்பவங்கள் பல நிகழ்த்தப்படுவதாகவும், ஆயுதம் ஏந்திய குழுக்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது இரண்டு வயது குழந்தை உட்பட 6 பேர் கட்டத்தப்பட்டதாக போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். கடத்தப்பட்டவர்களில் மூன்று பேர் மைனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரையும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தப் பின்னணியில்தான் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க மாவட்ட நிர்வாகத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தொடர் தாக்குதல்களில் ஜாகுரதார் கரோங் மார்க்கெட் பகுதியச் சுற்றியுள்ள பல கடைகள், வீடுகள், காவல் நிலையம் மற்றும் சிஆர்பிஎஃப் முகாம் உள்பட பல இடங்களில் ஆயுதக் கிளர்ச்சியாளர்கள் தீ வைத்துள்ளனர். இதன் காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 11 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x