Published : 12 Nov 2024 05:12 PM
Last Updated : 12 Nov 2024 05:12 PM
புதுடெல்லி: பெண்கள் விலைவாசி அதிகரிப்பை எதிர்த்து போராடுவதற்காக, ஜார்க்கண்டில் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்பட முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு நாளை (நவ.13) முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் ராகுல் காந்தி இந்தக் கருத்தினை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இந்தியில் வெளியிட்டுள்ள பதிவில், "நேற்று மையா சம்மான் யோஜனாவுக்கான நான்காவது தவணைத்தொகை ஜார்க்கண்ட் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தத் திட்டம் பெண்கள் விலைவாசி அதிகரிப்பை எதிர்த்து போராடுவதற்கும், சுயகவுரவத்தோடு வாழ்வதற்கும் உதவுகிறது. அதனால், இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை உயர்த்தி வழங்க நாங்கள் முடிவுசெய்துள்ளோம்.
டிசம்பர் 2024 முதல் ஜார்க்கண்ட் மாநில பெண்களுக்கு ஊக்கத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 53 லட்சம் பெண்கள் பயனடைகின்றனர். நான் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன் மீண்டும் மீண்டும் கூறுகிறேன். பாஜக தனது பணக்கார நண்பர்களுக்கு வழங்கியதை விட பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு இண்டியா கூட்டணி அதிக தொகையை வழங்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி தீவிரமாக முயற்சிக்கிறது. அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற பாஜக முயற்சிக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவ.13 மற்றும் 20 ஆகிய இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவுகள் நடைபெற உள்ளது. வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT