Published : 12 Nov 2024 01:08 AM
Last Updated : 12 Nov 2024 01:08 AM
ராஞ்சி: ஜார்க்கண்டில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஜார்க்கண்டில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் அடங்கிய இண்டியா கூட்ணி ஆட்சி நடைபெறுகிறது. ஜேஎம்எம் கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். இந்த சட்டப்பேரவையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.
இந்த தேர்தலில் இண்டியா கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைர்கள் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
வயநாடு இடைத்தேர்தல்: கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி மற்றும் செலக்காரா சட்டப்பேரவை தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வயநாடு தொகுதியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இடதுசாரி முன்னணி சார்பில் சத்யன் மோகேரியும் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர்.
செலக்காரா சட்டப்பேரவைத் தொகுதியில் இடதுசாரி முன்னணி சார்பில் யு.ஆர்.பிரதீப், காங்கிரஸ் சார்பில் ரம்யா ஹரிதாஸ் மற்றும் பாஜக சார்பில் கே.பாலகிருஷ்ணன் போட்டியிடுகின்றனர்.
இந்த 2 தொகுதியிலும் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. 3 அரசியல் கட்சி வேட்பாளர்களும் நேற்று இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT