Published : 11 Nov 2024 12:57 PM
Last Updated : 11 Nov 2024 12:57 PM
புதுடெல்லி: இந்திய இளைஞர்களுக்கான உலகளாவிய தேவை மேலும் அதிகரிக்கப் போகிறது; திறன்மிகு இந்திய இளைஞர்கள் தங்கள் நாட்டில் வேலை செய்ய வேண்டும் என்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்; இந்திய இளைஞர்களின் திறமையால் உலகமே கவரப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் கோயிலின் 200ம் ஆண்டு விழாவில் காணொலி மூலம் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: சுவாமி நாராயணன் கோயில் அமைக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆகின்றன. இந்திய கலாச்சாரத்தின் தொடர் ஓட்டத்திற்கு இது ஒரு சான்று. சுவாமி நாராயண் கோயிலின் ஆன்மிக உணர்வை நாம் உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம். இந்த மகத்தான நிகழ்வை ஒட்டி ரூ.200 வெள்ளி நாணயம் மற்றும் நினைவு முத்திரையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
வளர்ந்த இந்தியாவுக்கான அடிப்படை, நமது நாடு தற்சார்பு கொண்டதாக மாற வேண்டும் என்பதே. இதை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். இந்தியா தற்சார்பு அடைவதை நாமே உறுதி செய்ய வேண்டும்; நாட்டின் 140 கோடி மக்களே இதை செய்ய வேண்டும். உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை என்பது இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கான முக்கியமான முயற்சி. துரதிர்ஷ்டவசமாக இன்று சிலர் தங்களின் குறுகிய புரிதலின் காரணமாக இதன் முக்கியத்துவத்தை மறந்து விடுகின்றனர்.
சமூகத்தை சாதி, மதம், மொழி, உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஆண், பெண், கிராமம் எனப் பிரிக்கும் சதி நடக்கிறது. தேச விரோதிகளின் இந்த முயற்சியின் தீவிரத்தை நாம் புரிந்துகொள்வதும், நெருக்கடியைப் புரிந்துகொள்வதும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதும் அவசியம். வலிமையான, திறமையான, படித்த இளைஞர்களை நாம் உருவாக்க வேண்டும். திறமையான இளைஞர்கள் நமது மிகப்பெரிய பலமாக மாற வேண்டும். இந்திய இளைஞர்களுக்கான உலகளாவிய தேவை மேலும் அதிகரிக்கப் போகிறது. உலக தலைவர்கள் பலரை நான் சந்திக்கும்போது அவர்கள் கூறுவது, திறமையான இந்திய இளைஞர்கள் தங்கள் நாட்டில் வேலை செய்ய முன்வர வேண்டும் என்பதைத்தான். பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதை எதிர்பார்க்கிறார்கள். இந்திய இளைஞர்களின் திறமையால் உலகமே கவரப்படுகிறது.
போதைக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்க சுவாமிநாராயண் சமூகம் மிகவும் கடினமாக உழைத்துள்ளது. நமது துறவிகளும் மகாத்மாக்களும் இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து விலக்கி வைப்பதில் பெரும் பங்களிப்பைச் செய்ய முடியும். போதையில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற இதுபோன்ற பிரச்சாரங்கள் மற்றும் முயற்சிகள் எப்போதும் அவசியம். இதை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.
500 ஆண்டுகளுக்குப் பிறகு, அயோத்தியின் உதாரணம் நம் அனைவர் முன்னும் உள்ளது. காசி மற்றும் கேதாரத்தின் மாற்றமும் நம் முன்னே உள்ளது. இதுமட்டுமின்றி, நம் நாட்டில் இருந்து திருடப்பட்ட பலநூறு வருடங்கள் பழமையான சிலைகளை தேடி கண்டுபிடித்து, திருடப்பட்ட நம் தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் வடிவங்கள் மீண்டும் நம் நாட்டுக்கு கொண்டுவரப்படுகின்றன. அவை நம் கோயில்களுக்குத் திரும்புகின்றன.
இந்த முறை பிரயாக்ராஜில் கும்பமேளா நடைபெற உள்ளது. இந்த கும்பமேளா 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. ஜனவரி 13ம் தேதி முதல் சுமார் 45 நாட்களுக்கு நடைபெற உள்ள இந்த கும்பமேளாவுக்கு 50 கோடி பக்தர்கள் வருவார்கள். உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவளியை சாராத வெளிநாட்டினருக்கு கும்பமேளா குறித்து நீங்கள் விளக்க வேண்டும். இந்த கும்பமேளாவுக்கு குறைந்தபட்சம் 100 வெளிநாட்டினரையாவது வரவழைக்க முயற்சி செய்யுங்கள். இவ்வாறு நரேந்திர மோடி உரையாற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...