Published : 11 Nov 2024 05:12 AM
Last Updated : 11 Nov 2024 05:12 AM

ஓபிசி மக்களை ஜேஎம்எம் - காங். கூட்டணி பிரிக்கிறது: ஜார்க்கண்ட் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

பொகாரோ: இதர பிற்படுத்தப்பட்ட மக்களை (ஓபிசி) ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி பிரிக்கிறது என்று தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்த உள்ள 81 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நாளை மறுநாளும், 2-ம் கட்ட தேர்தல் வரும் 20-ம் தேதியும் நடைபெறவுள்ளன. இதற்கான பிரச்சாரத்தில் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி மற்றும் தே.ஜ கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியின் சதி திட்டங்கள் குறித்துமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சோட்டா நாக்பூர் பகுதியில் ஓபிசி பிரிவு மக்கள் இடையே 125 துணை பிரிவுகள் உள்ளன.

துணைப் பிரிவினரை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தி அவர்களின் ஒற்றுமையை உடைக்க ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி விரும்புகிறது. நீங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான், உங்களுக்கு பாதுகாப்பு. அதிகாரத்தை கைப்பற்ற அந்த கூட்டணி எந்த எல்லைக்கும் செல்லும்.

சுதந்திரம் பெற்றதிலிருந்தே எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி ஒற்றுமைக்கு எதிரான கட்சி காங்கிரஸ். அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாதவரை, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து நாட்டை கொள்ளையடித்தது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி சிவப்பு கம்பளம் விரிப்பதாக குற்றம் சாட்டினார்.

அவர் கூறுகையில், ‘‘ஜார்க்கண்ட்டில் ஊடுருவிய வங்கதேசத்தினர், பழங்குடியினரின் நிலம், இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்து நாட்டுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இங்கு பாஜக ஆட்சி அமைத்தால், வங்கதேசத்தினர் அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவர். எல்லையை கடந்து ஒருபறவை கூட இங்கு வர அனுமதிக்கப்படாது. பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டால், பழங்குடியினரின் உரிமை பறிபோகும் எனஜேஎம்எம் - காங்கிரஸ் கூட்டணி பொய்களை பரப்புகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழங்குடியினரின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x