Published : 11 Nov 2024 05:01 AM
Last Updated : 11 Nov 2024 05:01 AM

இமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவில் முதல்வருக்காக சமோசா வாங்கிய ஓட்டலில் குவியும் சுற்றுலா பயணிகள்

சிம்லா

சிம்லா: இமாச்சல பிரதேச முதல்வருக்காக சமோசா வாங்கிய ஓட்டலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கடந்த அக்டோபர் 21-ம் தேதிஇமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவில் உள்ள சிஐடி போலீஸாரின் தலைமை அலுவலகத்தில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு பங்கேற்றார்.

முதல்வர் மற்றும் விவிஐபிக்களுக்கு பரிமாற சிம்லாவின் லக்கர் பஜாரில் உள்ள நட்சத்திரஓட்டல் ரேடிசன் புளூவில் இருந்துசமோசாக்கள் வரவழைக்கப்பட்டிருந்தன. ஆனால் சிற்றுண்டி வழங்கும் நேரத்தில் சமோசாக்களை காணவில்லை. இதனால்முதல்வருக்கும் விவிஐபிக்களுக்கும் சிற்றுண்டி வழங்க முடியவில்லை.

இந்த சம்பவத்தில் கடும் அதிருப்தி அடைந்த சிஐடி போலீஸ் உயரதிகாரிகள் சிறப்பு விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இதன்படி சிஐடி சிறப்பு குழு தீவிர விசாரணை நடத்தி உயரதிகாரிகளிடம் அண்மையில் அறிக்கையை சமர்ப்பித்தனர். இந்த அறிக்கை தற்போதுஊடகங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3 பெட்டிகளில்... சிஐடி போலீஸ் விசாரணை அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் மற்றும் விவிஐபிக்களுக்கு வழங்க ரேடிசன் புளூஓட்டலில் சமோசாக்கள், கேக் வாங்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர், தலைமை காவலர் ஆகியோர் ஓட்டலுக்கு நேரடியாக சென்று 3 பெட்டிகளில் சமோசாக்கள், கேக்குகளை வாங்கி வந்தனர்.

சமோசாக்களை வாங்கி வந்த சப்-இன்ஸ்பெக்டர், அவற்றை பெண் இன்ஸ்பெக்டரிடம் வழங்கினார். அந்த இன்ஸ்பெக்டர் சமோசாக்களை, மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் பிரிவு (எம்டி) ஊழியர்களிடம் வழங்கி உள்ளார்.

எம்டி பிரிவு ஊழியர்கள், சமோசாக்களையும் கேக்குகளையும் அங்கிருந்த அனைவருக்கும் வழங்கி உள்ளனர். முதல்வர்வருவதற்கு முன்பாகவே சிஐடிதலைமை அலுவலகத்தில் குழுமியிருந்த அனைவரும் சமோசாக்களை சாப்பிட்டுவிட்டனர். இதன்காரணமாகவே முதல்வருக்கு சமோசாக்களை பரிமாற முடியவில்லை. இவ்வாறு சிஐடி சிறப்பு குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாஜகவின் சமோசா பேரணி: இமாச்சல பிரசேதத்தில் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநில முதல்வருக்காக வாங்கிய சமோசா மாயமானது குறித்து சிஐடி போலீஸார் விசாரணை நடத்தியது குறித்து பிரதான எதிர்க்கட்சியான பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜக இளைஞர் அணி சார்பில் சிம்லாவில் நேற்று சமோசா பேரணி நடத்தப்பட்டது. அப்போது முதல்வர் சுக்விந்தர் சிங்கின் உருவப்படத்துக்கு பாஜக இளைஞர் அணியினர் சமோசா ஊட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து பாஜகவினர்கூறும்போது, “இமாச்சல பிரதேசத்தில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி பரிதவித்து வருகின்றனர். இதுகுறித்து முதல்வர் சுக்விந்தர் சிங் சிறிதும் கவலைப்படவில்லை. காணாமல் போன சமோசாக்களை கண்டுபிடிக்க சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்" என்று குற்றம் சாட்டினர்.

பாஜக எம்எல் ஆசிஷ் சர்மா,சமோசாக்களை வாங்கி முதல்வரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதேபோல பல்வேறு பாஜகதலைவர்கள் முதல்வரின் வீட்டுக்கு சமோசா பார்சல்களை அனுப்பி வருகின்றனர்.

ஓட்டலில் குவியும் மக்கள்: இமாச்சல் முதல்வருக்காக சமோசா வாங்கப்பட்ட ரேடிசன் புளூ ஓட்டலில் சமோசா வாங்க பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதுகுறித்து அந்த ஓட்டலில் பணியாற்றும் பரத்வாஜ் கூறும்போது, “கடந்த 18 ஆண்டுகளாக ரேடிசன் புளூஓட்டலில் பணியாற்றி வருகிறேன்.எங்களது ஓட்டலில் அனைத்து உணவு வகைகளும் பிரபலமானவை. தற்போதைய சர்ச்சையால் எங்கள் ஓட்டல் சமோசா மிகவும் பிரபலமாகி விட்டது. பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் சமோசாவுக்காக எங்கள் ஓட்டலில் குவிந்து வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x