Published : 11 Nov 2024 05:49 AM
Last Updated : 11 Nov 2024 05:49 AM

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போதை பொருள் கடத்த முயற்சி: எல்லையில் 200 ட்ரோன்களை கைப்பற்றிய ராணுவம்

எல்லையில் பிடிபட்ட ட்ரோன்

புதுடெல்லி: பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நடப்பாண்டில் இதுவரை 200 ட்ரோன்கள் பிடிபட்டன என்று எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் எல்லைப் பாதுகாப்புப் படை காவல் பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் இந்திய எல்லைக்குள் ஆயுதங்கள், போதைபொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதை தடுக்க எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) சார்பில்பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து பிஎஸ்எப் வட்டாரங்கள் கூறியதாவது: முந்தைய காலத்தில் சுரங்கப் பாதை மற்றும் குழாய்கள் வழியாகபாகிஸ்தான் எல்லையில் இருந்துஇந்திய எல்லைக்குள் ஆயுதங்கள்,போதை பொருட்கள் கடத்தப்பட்டன. கடந்த 2019-ம் ஆண்டு முதல் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இருந்து 4 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி பிடித்து உள்ளோம். இந்தஆண்டில் இதுவரை 200 ட்ரோன்கள் பிடிபட்டு உள்ளன.

ட்ரோன்களை சுட்டு வீழ்த்த உள்நாட்டு தொழில்நுட்பத்தில் டி4 என்ற ட்ரோன் தடுப்பு சாதனம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில்அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்திய எல்லை பகுதிக்குள் நுழையும் ட்ரோன்களை டி4 சாதனம் செயல் இழக்கச் செய்யும். தற்போது டி4 ட்ரோன் தடுப்பு சாதனங்களை சோதனை அடிப்படையில் பயன்படுத்தி வருகிறோம். இதனை எல்லைப் பகுதி முழுவதும் நிறுவ திட்டமிட்டு உள்ளோம்.

ரஷ்ய ராணுவத்தில் பான்டிர் எஸ்1 என்ற ட்ரோன் ஏவுகணை தடுப்பு சாதனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் இடையே நடைபெறும் போரில் ட்ரோன்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உக்ரைனின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் மாளிகை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பான்டிர் எஸ்1 ட்ரோன் தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்த அதிநவீன பான்டிர் எஸ்1-ஐ ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே அண்மையில் கையெழுத்தானது. ஒரு நிமிடத்தில் பான்டிர் எஸ்1 மூலம் 16 ட்ரோன்களை சுட்டு வீழ்த்த முடியும். இவற்றை இமய மலைப் பகுதிகள் மற்றும் ராஜஸ்தான் பாலைவனத்தில் நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு எல்லைப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x