Published : 12 Apr 2014 09:38 AM
Last Updated : 12 Apr 2014 09:38 AM
குஜராத் கலவரத்தை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவை முஸ்லிம் உறுப்பினர் ஒருவரை உள்ளடக்கி திருத்தி அமைக்க வேண்டும் என்ற மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
குஜராத் கலவரத்தை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு, மாநில முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றமில்லை என்று கூறி, 2012 ஆம் ஆண்டு அறிக்கை அளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, பாத்திமா என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடியை குற்றமற்றவர் என்று அறிவித்தது தவறு. முஸ்லிம் உறுப்பினர் ஒருவரை இடம்பெறச் செய்வதுடன் சிறப்பு புலனாய்வுக் குழுவை முழுமையாக சீரமைக்க வேண்டும்,” என்று கூறியிருந்தார்.
இம்மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து, பாப்தே அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. சிறப்பு புலனாய்வு குழுவை திருத்தி அமைக்க மறுத்த நீதிபதிகள், “இப்போதைய சூழ்நிலையில் குழுவை திருத்தி அமைப்பது நல்லதல்ல. மனுதாரர் உரிய நீதிமன்றத்தில் முறையிடலாம்,” என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, மனுவை வழக்கறிஞர் பாத்திமா வாபஸ் பெறுவதாக கூறினார். அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.கடந்த 3-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட ஒன்பது வழக்குகளில், ஆறு வழக்குகள் முடிந்து விட்டதாகவும், 68 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொஸைட்டி படுகொலை வழக்கு உள்ளிட்ட மூன்று வழக்குகள் மட்டுமே இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT