Published : 10 Nov 2024 12:46 PM
Last Updated : 10 Nov 2024 12:46 PM

மகாராஷ்டிரா | பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அமித் ஷா

மும்பை: மகாராஷ்டிர சட்டபேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (நவ.10) வெளியிட்டார்.

மும்பையில் நடந்த தேர்தல் அறிக்கை வெளியிட்டு நிகழ்ச்சியில் துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், மாநில பாஜக தலைவர் சந்திரசேகர பவன்குலே, மும்பை பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கெண்டனர். மகாராஷ்டிரா மாநில தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை குழுவுக்கு தலைமை தாங்கிய பாஜகவின் மூத்த அமைச்சர் சுதிர் முன்கந்திவார் கூறுகையில், "இந்த தேர்தல் அறிக்கை, மகாராஷ்டிர மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எங்களின் தலைமையின் கீழ் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மகாயுதி அரசு மிகவும் இன்றியமையாதது. எங்களின் இரட்டை இஞ்சின் அரசு சாலை உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதிலும், இணைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் இன்னும் அதிக சாலைகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகிறது. ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நாங்கள் வெற்றி பெற்ற பின்பு இந்த அறிக்கையில் உள்ள ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றுவோம்" என்றார்.

‘தொலைநோக்கு ஆவணம்’ என்று வர்ணிக்கப்படும் பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கையில், மிஷன் ஒலிம்பிக் 36, விவசாயிகளுக்கான ஆதரவு, லட்தி பெஹ்னா யோஜனா, சுகாதாரம் உள்ளிட்ட பல முன்னெடுப்புகள் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "சுதந்திர இந்தியாவுக்கும் சமூக சீர்த்திருத்தத்துக்கும் மகாராஷ்டிரா எப்போதும் வழிகாட்டியுள்ளது. இந்த அறிக்கை மாநிலத்தின் விருப்பங்களை பிரதிபலிக்கிறது. இந்த தேர்தல் அறிக்கை மகாராஷ்டிர மக்களின் உண்மையான தேவைகள் மற்றும் விருப்பங்களை வெளிப்படுத்துகிறது. சத்திரபதி சிவாஜி மகாராஜாவும் இங்கே இருந்துதான் தனது பயணத்தைத் தொடங்கினார்.

இந்த அறிக்கை மாநிலத்தின் உணர்வினை வெளிக்காட்டுகிறது. விவசாயிகளை மதிப்பது மற்றும் பெருமை உணர்வினை வளர்ப்பதற்கு பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்த அரசு பாதுகாப்பான மகாராஷ்டிராவை உருவாக்குவதற்கு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது" என்றார்.

மேலும், பாஜகவின் நேரடிப்போட்டி மகா விகாஸ் அகாதியுடன்தான் என்று தெரிவித்த அமித் ஷா, "வீர் சாவர்கர் குறித்தும் பால் தாக்ரே குறித்தும் பாராட்டி பேசுமாறு ராகுல் காந்தியிடம் உங்களால் சொல்ல முடியுமா?" என்று உத்தவ் தாக்கரேவுக்கு அவர் சவால் விடுத்தார். மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23ம் தேதி நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x