Published : 10 Nov 2024 06:20 AM
Last Updated : 10 Nov 2024 06:20 AM
புதுடெல்லி: உ.பியின் வாராணசியுடன் தமிழர்களுக்கு உள்ள கலாச்சாரத் தொடர்பை எடுத்துரைத்து வலுப்படுத்த காசி தமிழ் சங்கமம் 2022-ல் துவக்கப்பட்டது. சுமார் ஒரு மாதம் நடைபெற்ற இந்த சங்கமத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். பிரதமரின் மக்களவை தொகுதியில் இரண்டாவது சங்கமமும் கடந்தாண்டு நடைபெற்றது. தற்போது இந்தாண்டு நடைபெற வேண்டிய மூன்றாவது சங்கமம் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வாராணசியின் அருகிலுள்ள பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவை தமிழர்கள் காணும் வகையில், காசி தமிழ் சங்கமம்-3 நிகழ்ச்சி அடுத்தாண்டு ஜனவரி 19 முதல் 28 வரை நடைபெறுகிறது. வழக்கம் போல், காசியில் இந்த சங்கமத்தையும் மத்தியக் கல்வித்துறையுடன் இணைந்து வாராணசி மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் மத்தியக் கல்வித் துறை அமைச்சக வட்டாரம் கூறும்போது, ‘‘கடந்த இரண்டு காசி தமிழ் சங்கமங்களும் கடும் குளிர் நிலவும் நாட்களான நவம்பரில் நடைபெற்றன. இதை சமாளிக்க தமிழர்கள் பட்ட சிரமம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையும் சமாளித்து கும்பமேளாவையும் காணும் வகையில் இனிமேல் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை ஜனவரியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகள் குறித்த காணொலி கூட்டம் நவ.11-ல் நடைபெறுகிறது’’ எனத் தெரிவித்தனர்.
வழக்கம்போல், இந்த சங்கமத்திற்கும் தமிழகத்தின் சென்னை, மதுரை மற்றும் ராமேஸ்வரம் நகரங்களிலிருந்து தமிழர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் அழைத்துவரப்பட உள்ளனர். இவர்கள் வாராணசியுடன், அயோத்தி மற்றும் பிரயாக்ராஜுக்கும் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT