Published : 09 Nov 2024 03:39 PM
Last Updated : 09 Nov 2024 03:39 PM
பக்மாரா: ஜார்க்கண்ட்டில் இண்டியா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்போது பெண்களுக்கான கவுரவத் தொகை ரூ.2,500 உள்ளிட்ட 7 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பக்மாரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர், “ஏழைகள், விவசாயிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினரிடம் பிரதமர் நரேந்திர மோடி செல்வதில்லை. அவர் எந்த ஒரு ஏழையின் திருமணத்துக்கும் சென்றதில்லை. ஆனால், அம்பானி இல்ல திருமணத்துக்கு சென்றுள்ளார். அவர்கள் உங்களுடையவர்கள் அல்ல, அவர்கள் அவர்களுடையவர்கள்.
இன்று இந்தியாவில் இளைஞர்களும் பெண்களும் வருத்தத்தில் இருக்கிறார்கள். பெரிய பேச்சுகளை பேசுவதில் மட்டுமே மோடியின் கவனம் உள்ளது. செயலில் எதுவும் இல்லை. நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் தாய்மார்களும், சகோதரிகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நரேந்திர மோடி அனைத்தையும் ஜிஎஸ்டி-யின் கீழ் கொண்டு வந்துள்ளார். நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் வழியாகவே முழு வரிக் கட்டமைப்பும் உள்ளது.
நாட்டில் 50% ஓபிசி, 15% தலித், 8% பழங்குடியினர் மற்றும் 15% சிறுபான்மை சமூக மக்கள் உள்ளனர். ஆனால் நாட்டின் பெரிய நிறுவனங்களின் நிர்வாகத்தில் இவர்களில் ஒருவரைக்கூட நீங்கள் பார்க்க முடியாது.
இண்டியா கூட்டணி ஜார்கண்ட் மாநிலத்துக்கு 7 உத்தரவாதங்களை அளிக்கிறது. இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் காஸ் சிலிண்டர் விலை ரூ.450 ஆக குறைக்கப்படும். மேலும், ஒவ்வொரு நபருக்கும் 7 கிலோ ரேஷன் இலவசமாக வழங்கப்படும்.
பெண்களின் கவுரவத்தை உயர்த்தும் நோக்கில் அவர்களுக்கு மாதம்தோறும் ரூ. 2,500 கவுரவத் தொகையாக வழங்கப்படும். சமூக நீதிக்கான உத்தரவாதத்தின் கீழ், ஜார்க்கண்ட்டில் எஸ்டிக்கு 28%, எஸ்சிக்கு 12%, ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும். வேலைவாய்ப்பு மற்றும் சுகாதார பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் நோக்கில், 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும், ரூ.15 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
கல்விக்கான உத்தரவாதமாக அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பட்டயக் கல்லூரிகள் அமைக்கப்படும். மாவட்டத் தலைநகரங்களில் பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும். விவசாயி நலன்களை உறுதிப்படுத்தும் நோக்கில், நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.3,200 நிர்ணயிக்கப்படும். மற்ற விவசாயப் பொருட்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை 50% உயர்த்தப்படும்” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT