Published : 09 Nov 2024 08:20 AM
Last Updated : 09 Nov 2024 08:20 AM
லக்னோ: பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்றது. இதில் உத்தர பிரதேச பெண்கள் ஆணைய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.
இதில் கலந்து கொண்ட ஷாம்லி மாவட்ட பயிற்சி அதிகாரி ஹமீத் உசைன் கூறுகையில், ‘‘பெண்களுக்கான உடற்பயிற்சி மையம், யோகா மையங்கள், நாடக அரங்குகளில் பெண் பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்என ஷாம்லி மாவட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். அதேபோல் பள்ளி பேருந்துகளில் பெண் பாதுகாப்பாளர் அல்லது ஆசிரியரை நியமிக்க வேண்டும். பெண்களுக்கான தையல் கடைகளில் பெண்களுக்கு அளவெடுக்க பெண் தையல்காரரை நியமிக்க வேண்டும். ஆண் தையல்காரர்கள் அளவெடுக்க கூடாது. அங்கு கண்காணிப்பு பணிக்கு சிசிடிவி கேமராபொருத்த வேண்டும்.
கேமரா கண்காணிப்பு: அதேபோல் பயிற்சி மையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க உத்தரவிடப்பட் டுள்ளது. பெண்களுக்கான ஜவுளிக்கடையில் உதவியாளர்களாக பெண்களை நியமிக்கவும் அறிவு றுத்தப்பட்டுள்ளது’’ என்றார். ‘‘பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் எடுக்கப்பட வேண்டும்’’ என உள்ளூர் சமூக சேவகி வீனா அகர்வால் தெரிவித்தார்.
குர்கான் நகரில் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வாட்ஸ் ஆப்-ல் அவசர அழைப்பு வசதியை ஹரியானா காவல்துறை கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இது இரவு நேரங்களில் தனியாக பயணம் மேற்கொள்ளும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
பயணம் செய்பவர்களின் லைவ் லொகேஷன் காவல்துறை வாட்ஸ் ஆப்-ல் பகிரப்படுவதால், அவர்களின் பயணம் கண்காணிக்கப்படுகிறது. இதேபோன்ற நடவடிக்கையை உ.பி.யிலும் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. முதல்கட்ட ஆலோசனை கூட்டத்தில் உறுப்பினர்கள் தெரிவித்த பரிந்துரைகள் அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் என உ.பி பெண்கள் ஆணையம் தெரிவித்து உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT