Published : 09 Nov 2024 06:53 AM
Last Updated : 09 Nov 2024 06:53 AM

லஞ்சம் வாங்கியதாக டெல்லி அரசு ஊழியர் கைது: கட்டுக் கட்டாக பதுக்கிய ரூ.3.79 கோடி பறிமுதல்

டெல்லி நகர்ப்புற வீட்டு வசதி மேம்பாட்டு வாரியத்தின் (டியுஎஸ்ஐபி) சட்டத்துறை அதிகாரி விஜய் மேகோ வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.3.79 கோடி ரொக்கம்.படம்: பிடிஐ

புதுடெல்லி: சீல் வைத்த கடைகளை திறப்பதற்காக ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக டெல்லி அரசு அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து ரூ.3.79 கோடி ரொக்கத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

டெல்லியில் உள்ள டெல்லி நகர்ப்புற வீட்டுவசதி மேம்பாட்டு வாரியத்தின் (டியுஎஸ்ஐபி) சட்டத் துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் விஜய் மேகோ. டெல்லியில் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வரும் கரண் குப்தா என்பவர் இவரை அணுகினார். கரண் குப்தாவுக்கு டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் மினிஸ்ட்ரி ஆஃப் கேக்ஸ், ஸ்ரீ சன்வாரியா ஸ்வீட்ஸ் என்ற பெயரில் 2 கடைகள் இருப்பதாகவும், அந்த கடைகளுக்கு வீட்டு வசதி மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்து விட்டதாகவும் விஜய் மேகோவிடம் தெரிவித்தார். கடந்த 2023 ஜூலையில் சட்டவிரோத கட்டிட பிரச்சினை தொடர்பாக அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக கரண் குப்தா தெரிவித்தார்.

சீல் வைக்கப்பட்டுள்ள தனது 2 கடைகளை திறப்பதற்கும், தங்கு தடையின்றி கடைகளில் வியாபாரம் நடத்துவதற்கும் உதவ வேண்டும் என்றும் விஜய் மேகோவிடம், கரண் குப்தா கேட்டுள்ளார். இதையடுத்து, கடைகளை திறக்க ரூ.40 லட்சம் தரவேண்டும் என்று விஜய் மேகோ கேட்டுள்ளார். இந்த பணத்தில் டியுஎஸ்ஐபியை சேர்ந்த மற்றொரு அதிகாரிக்கு பங்கு தரவேண்டும் என்றும் கரண் குப்தாவிடம் விஜய் மேகோ கூறியுள்ளார்.

இதையடுத்து, சிபிஐ அலுவலகத்தில் கரண் குப்தா புகார் செய்தார். சிபிஐ அதிகாரிகள் கரண் குப்தாவிடம் ரூ.5 லட்சத்தை கொடுத்து அதை டியுஎஸ்ஐபி அதிகாரி விஜய் மேகோவிடம் தருமாறு கூறியுள்ளனர்.

சிபிஐ அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி, கரண் குப்தா ரூ.5 லட்சத்தை விஜய் மேகோவிடம் வழங்கினார். அப்போது மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அவரது வீட்டில் பல்வேறு இடங்களில் கட்டுக் கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் கைப்பற்றப்பட்டது.

மொத்தம் ரூ.3.79 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். விஜய் மேகோ மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரிலான வீடு, நிலம் உள்ளிட்ட சொத்து ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.சிபிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x