Published : 08 Nov 2024 02:08 PM
Last Updated : 08 Nov 2024 02:08 PM
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர வலியுறுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை இன்று காலை கூடியதும், சட்டப்பிரிவு 370 தொடர்பாக சட்டப்பேரவையில் கடந்த 5ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பாகிஸ்தானின் திட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
சபாநாயகர் அப்துல் ரஹிமின் இருக்கைக்கு அருகே திரண்ட பாஜக எம்எல்ஏக்கள் தீர்மானத்துக்கு எதிராக தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். அவர்களை அவர்களின் இருக்கைக்குச் சென்று அமருமாறு சபாநாயகர் கூறினார். எனினும், அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை அவையில் இருந்து வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் அப்துல் ரஹிம் உத்தரவிட்டார். இதை அடுத்து, 11 பாஜக எம்எல்ஏக்களும் லங்காட் சட்டமன்ற உறுப்பினர் ஷேக் குர்ஷித்தும் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக 11 பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பிரிவு 370 தொடர்பாக ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் சுரீந்தர் சவுத்ரி செவ்வாயன்று (நவம்பர் 5, 2024) ஒரு தீர்மானத்தை முன்வைத்தார். “ஜம்மு-காஷ்மீர் மக்களின் அடையாளம், கலாச்சாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் சிறப்பு அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு உத்தரவாதங்களின் முக்கியத்துவத்தை இந்த சட்டமன்றம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. சட்டப்பிரிவு 370 ஒருதலைப்பட்சமாக நீக்கப்பட்டதற்கு இந்த பேரவை கவலை தெரிவிக்கிறது.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு உத்தரவாதங்களை மீட்டெடுப்பதற்கும், அதற்கான அரசியலமைப்பு வழிமுறைகளை உருவாக்குவதற்கும், ஜம்மு காஷ்மீரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு மத்திய அரசை பேரவை கேட்டுக்கொள்கிறது.
மறுசீரமைப்புக்கான எந்தவொரு செயல்முறையும் தேசிய ஒற்றுமை மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்களின் நியாயமான விருப்பங்கள் இரண்டையும் பாதுகாக்க வேண்டும் என்பதை இந்த சட்டமன்றம் வலியுறுத்துகிறது.” என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT